இன்னாமைக் குறிப்பு நல்லிசைச் சான்றோர்களாகிய புலவர்கள் இன்னாதவற்றை இயன்ற வரையில் மறைத்துக்குறிப்பாகப் புலப்படுத்தும் இயல்புடையவர்கள். அவ் வியல்பை நன்கு அறிந்தவர் இவ்வுரையாசிரியர்:- ‘கோவதை முதலாயின வாக்காற் சொல்லவும் படாமையின், ஆன் முலையறுத்தவெனவும் மகளிர் கருச்சிதைத்தவெனவும், பார்ப்பார்த் தப்பிய வெனவும் மறைத்துக் கூறப்பட்டன’ (34) ;’ ‘இறந்தவென்று சொல்லுதல் இன்னாமையால் போகியவென்றார்’ (220) ‘படவென்றல் இன்னாமையிற் கைவைத்துறங்கவும் கண் கிழிந்துருளவும் கால்பரிந்துலறவும் கதியின்றி வைகவுமெனத் தகுதிபற்றிக் கூறப்பட்டடன’ (229) . வழக்கு சில இடங்களில் இன்ன உலகவழக்கைக் குறிக்கொண்டது இது வென்றும் இச்சொல் இன்ன நாட்டவர் வழக்கென்றும் புலப்படுத்துவர்:- ‘உழிஞை - கொற்றான்; அது குடகுநாட்டார் வழக்கு’ (50) ; ‘விரை வளர்கூந்தல் வரைவளியுளரவென்றது, கொண்டைமேற் காற்றடிக்க வென்பதொரு வழக்குப்பற்றி நின்றது’ (133) ; ‘கிளி.......குரலனையனென்றது கிளியீடு வாய்த்தாற்போல்வனென்னும் வழக்கைப் பற்றி நின்றது’ (138) ; ஓசையென்றது ஆகுபெயரான்’ ஓசையையுடைய கறியை; இஃது ஒரு திசைச்ொல்’ (261) மரபு சிவபெருமான், திருமால், பலதேவர், முருகக்கடவுள் முதலியவர்களைப் பற்றிய செய்திகள் வருமிடங்களில் இவர் அவ்வக்கடவுளின் அன்பர்கள் வழங்கும் மரபு பிழையாமல் உரைவகுக்கின்றார். இது, சிவபிரானுக்குரிய பொருள்களைத் திருவென்னும் அடைகொடுத்து, ‘திருநுதல்,’ ‘திருச்சடை,’, ‘திருமுடி’ என்றும் (1) , திருமால் மேனியைத் திருமேனியென்றும், பலதேவரை நம்பி மூத்தபிரானென்றும் அவரது நிறத்தைத் திருநிறமென்றும், முருகக்கடவுளைப் பிள்ளையாரென்றும் (56) வழங்குவதனால் உணரலாம். உவமைகளை விளக்கல் உவமைகள் வந்த இடங்களில் இன்னதற்கு இஃது உவமை யென்பதையும் பொதுத்தன்மை இன்னதென்பதையும் வெளிப்படுத்துவர்; அங்ஙனம் வெளிப்படுத்தும் முறை சுருங்கிய உருவத்தில் இருப்பினும் விளங்கவைக்கும் திறனுடையதாக இருக்கும்.
|