பக்கம் எண் :

688

‘களிற்றுக்கு நாவாயோடு உவமை எதிர்ப்படையைக் கிழித்தோடலும், திங்களோடு உவமை வாளோர் சூழத்தன் தலைமை தோன்றச்செல்லுதலுமாகக் கொள்க’ (13) ; ‘மன்னர்க்கு இடையனும், அவர் படைக்குச் சிறுதலையாயமும், கோதை நாட்டிற்குப் புலிதுஞ்சு வியன்புலமும் உவமையாகக் கொள்க’ (54) ; ‘திங்கள் நாள்நிறைமதியத்தனையை யென்றது, அறிவும் நிறைவும் அருளும் முதலாகிய குணங்களால் அமைந்தா யென்றவாறாம்’ (102) ; இங்ஙனம் உள்ள பிற இடங்களையும் கண்டுகொள்க.

வட சொல்லாட்சி

இவரது உரைநடை பெரும்பாலும் செந்தமிழ்ச் சொல் நிறைந்ததாக இருப்பினும் ஒரோவிடங்களில் சில தமிழ்ச் சொற்களுக்கு வடசொற்களைக் கொண்டு இவர் பொருளெழுதியுள்ளார். கடனென்பதற்குப் பிண்டோதகக் கிரியையென்றும், மருந்தென்பதற்குப் பரிகாரமென்றும், ஒளிறுமென்பதற்குப் பாடஞ் செய்யுமென்றும், அறமென்பதற்குத் தர்மமென்றும், பூண்டென்பதற்குப் பரித்தென்றும், ஓம்புதலென்பதற்குப் பரிகரித்தலென்றும் கூறும் இடங்களையும் இவற்றைப் போன்ற பிறவற்றையும் காண்க.

குறிப்பு மொழி

அங்கங்கே நல்லிசைப்புலவர்கள் குறிப்பாகப் புலப்படுத்தியிருக்கும் பகுதிகளைச் சுட்டி, ‘இது குறிப்புமொழி,’ ‘இஃது இகழ்ச்சிக்குறிப்பு’ என்று தெளிவுறுத்தலை இவர் உரையிற் பல இடங்களிற் காணலாம்:-

பாரிமகளிர் தம் தந்தையின் பகைவராகிய வேந்தரை, “வென்றெறி முரசின்வேந்தர்” (112) என்றதை, “ஈண்டு இகழ்ச்சிக்குறிப்பாய் நின்றது’ என்பர். பரிசில் கொடாமல் நீட்டித்த நன்மாறன்பால் ஆவூர் மூலங்கிழார், “நோயில ராக நின்புதல்வர்”, “சிறக்க நின்னாயுள்” (196) என்று கூறியவற்றைக் குறிப்புமொழி யென்பர். இங்ஙனமே, ‘வாழ்க நின்கண்ணியெனவும் நீடுவாழியவெனவும் நின்றவை குறிப்பு மொழி’ (198) , ‘வெலீஇயர் நின்வேல் என்றது குறிப்புமொழி’ (202) , ‘யான் களிறின்றிப் பெயராநின்றேனென்பது கருத்தாகலின், நோயிலை யாகுக வென்பது இகழ்ச்சிக்குறிப்பு’ (205) , ‘புலம்பை முந்துறுத்துக் கொண்டு போகாநின்றேன் என இரங்கிக் கூறியவதனால், வாழியர் குருசிலென்பது இகழ்ச்சிக் குறிப்பாயிற்று’ (210) , ‘இன்சிறுபிண்டமென்றது இகழ்ச்சிக் குறிப்பு’ (234) என்ற இடங்களில் உரைத்தல் காண்க.

இன்ன சிறப்பென்றுரைத்தல்

சில செய்யுட்களின்பின் இவற்றால் இன்ன சிறப்புக் கூறப்பட்டது என்று பகுத்துக் கூறுதல் இவர் உரைவகுப்பினுள் ஒன்று. பதிற்றுப்பத்து உரை யாசிரியரும் இங்ஙனம் கூறுவர்:-

‘இது கொடைச்சிறப்பும் வென்றிச்சிறப்பும் கூறியவாறு’ (65, 130) ; ‘இதனால் அவன் இன்பச்சிறப்பும் வென்றிச்சிறப்பும் கூறியவாறு (96) என வரும் இடங்களைப் பார்க்க.