நயங்கள் இவருடைய உரையிலுள்ள நயங்கள் பலபடியாகப் பகுத்து அறிந்து இன்புறுதற்குரியன. சில சில இடங்களில் இவர் அமைத்திருக்கும் உரை இவருடைய உலகியலறிவையும், பொருளியலறிவையும், கல்விச் சிறப்பையும் புலப்படுத்துகின்றன:- “எருத்து வவ்விய புலி” (4) என்பதற்கு, ‘கழுத்தைக் கவ்வி உதிரம் உவற்றியுண்ட புலி’ என்று விரித்துக்கூறும் உரை இவர் ஒவ்வொரு பொருளின் இயல்பையும் அறிந்து உரையெழுதும் திறலினரென்பதைப் புலப்படுத்துகின்றது. “வழிபடு வோரை வல்லறி தீயே” (10) என்ற விடத்து அதன் கருத்தை, ‘அறிந்து அவர்களுக்கு அருள்செய்வை யென்பதாம்’ என்று புலப்படுத்தல் பல நூல்களில் வந்துள்ள அத்தகைய பிரயோகங்களுக்கு நல்லுரைகாணத் துணையாகின்றது. தாமப்பல் கண்ணனார் மாவளத்தானை இகழ்ந்ததற்கு இரங்கிப்பாடிய செய்யுள் அரசவாகையாதலை, ‘பொறுத்தற்கரிய பிழையைப் பொறுத்த குணவென்றியான் அரச வாகையாயிற்று’ (43) என்று தெளிவுறுத்திய பகுதி இவருடைய நுண்ணறிவைக் காட்டுகின்றது. “இளைய னிவனென வுளையக் கூறி” (72) என்ற இடத்து இவனென்ற அண்மைச்சுட்டு நெடுந்தூரத்திலுள்ள பகைவர் கூற்றாக அமையுமோ என்ற ஐயத்தை, ‘இவனென்றார் தம் கருத்துக்கண் அணுமையால்’ என்று நீக்குவதால் படிப்பாருக்கு இன்னதை விளக்கவேண்டுமென்பதை யறிந்து உரையெழுதுபவரென்று அறியலாம். ‘பொய்கூறாமையிற் செந்நாவென்றார்; தற்புகழ்ந்தாராகாமற் சிறு செந்நாவென்றார்’ (148) என்ற உரையினால் இவர் நல்லிசைப்புலவரின் சால்பை நன்கறிந்தவரென்பது போதரும். ‘ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின்” (164) என்றவிடத்து, ‘அடுதலை மிகவும் மறத்தலால் தேய்பின்றி உயர்ந்த அடுப்பென்றாராம்’ என்றும், நெடுமொழி மறந்த சிறுபே ராளர்” (178) என்றவிடத்து, ‘நெடுமொழி மொழிதலாற் பேராண்மையும், பின் அதனை மறத்தலாற் சிறுமையும் உடைமையின் சிறுபேராளர் என்றார்’ என்றும், “முழூஉ வள்ளுரமுணக்குமுள்ள” (219) என்றவிடத்து, ‘அரசுதுறந்து வடக்கிருந்து உயிர்நீத்த உள்ள மிகுதியால் மள்ளவென்றார்’ என்றும், “வல்வின் மறவ ரொடுக்கங் காணாய், செல்லல் செல்லல் சிறக்கநின் னுள்ளம்” (259) என்றவிடத்து, ‘செல்லலென்றது அவரைக் கண்டு பொழுது கொன்றன்றிச் செல்லலென்பதாம்’ என்றுமெழுதிய பதசாரங்கள் மிக்க இன்பத்தை விளைவிக்கின்றன. ‘நட்டோரை யுயர்பு கூறினனென்றது, தான் உயர்த்துக் கூறவே யாவரும் உயர்த்துக்கூறுவரென்பதாம்’ (239) என்றது இவருடைய உலகியல் அறிவை விளக்குகின்றது.
|