| புள்ளுறு புன்கண் தீர்த்த பேரருளினோன் மருகனாயும், செருவின் கண் இவற்றை நல்லவென்று பாராது அழித்தல் வல்லையாயிருந்தாயென அவன் மறம் வியந்து கூறியவாறு. ஐந்தலை யென்றதற்கு ஐந்து தலை யெனினு மமையும். இடங்கருங்குட்ட மென்பதனுள் உம்மையை அசைநிலையாக்கி இடங்கரையுடைய குட்டமென் றுரைப்பாரு முளர். இடங்க ரீட்டத் தென்று பாடமோதுவாரு முளர்.
விளக்கம்: விசும்பில் தீப் பிறப்பதில்லையாகலின், விசும்பு தீப்பிறப்ப என்பதற்குத் தீப் பிறக்கும் பரிசு என்று கூறினார். கலித்தல், தழைத்தல், வேண்டுவன குறைவறப் பெற்று மெய் வலி தழைத்தவழிச் செருக்கு விளைதலின், கலித்த என்றதற்குச் செருக்கிய என வுரைப்பர் கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ (புறம்:39) என்புழியும் இவ்வாறே கூறுதல் காண்க. நெடு நீர் என்றவிடத்து நெடுமை, மிகுதி குறித்து நின்றது. வேந்தன் கோயிலினுள்ளே யிருக்குமாறு விளங்க, வேந்து அகத் துண்மையின் என்றதற்கு அரசுண்டாதலின் என்றார். அரசன் உளனாதலின் என்பார், வேந்தென அஃறிணை வாய்ப்பட்டாற் கூறியது கொண்டு உண்டாதலின் என உரை கூறினார். 38. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளவளவன்
ஒருகால் ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார், இக் கிள்ளி வளவனைக் காண வந்தாராக, நீவிர் எந் நாட்டீர்? எம்மை நினைத்தலுண்டோ? என்று வினவினான்;அவற்கு, வேந்தே, நீ சினந்து நோக்குமிடம் தீப்பரவும்; அருளி நோக்குமிடம் பொன் பொலியும்; நீ வேண்டியது விளைக்கும் ஆற்றலுடைய; யாம் நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்தோம்; நின்னளவு எம்மால் நினைக்கும் அளவிற்றன்று; பரிசிலர் நின் பகைவர் நாட்டில் இருப்பினும், நின் நாட்டையே நினைப்பர் என்று பாராட்டிப் பாடிய பாட்டு இது. ஆசிரியர் ஆவூர் மூலங் கிழார் ஆவூர் மூலம் என்னும் ஊரினர். சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயணையும், மல்லி கிழான் காரியாதியையும், பாண்டியன் கீரஞ்சாத்தனையும் பாராட்டிப் பாடியுள்ளார். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் ஒருகால் பரிசில் தர நீட்டித்தானாக, சினமுற்ற இவர், இரப்போரை வருத்துதலும் புகழ் குறைபட வரும் செய்கையும் சேய்மையிற் காணாது ஈண்டே கண்டனம்; நின் புதல்வர் நோயிலராக; யான் செல்வேன் என்பது இவரது புலமை சான்ற மனத்திட்பத்தை யுணர்த்தும். இவர் பாடிய கரந்தைப் பாண் பாட்டும் தானை மறமும் மிக்க இன்பந் தருவனவாகும்.
| வரைபுரையு மழகளிற்றின்மிசை வான்றுடைக்கும் வகையபோல விரவுருவின கொடிநுடங்கும் வியன்றானை விறல்வேந்தே | 5. | நீ, உடன்றுநோக்கும்வா யெரிதவழ |
|