பக்கம் எண் :

108

இல்லோர் இரத்தலும் - வறியோர் செல்வமுடையோர்பாற்
சென்றிரத்தலும்; கடவ தன்மையின் - ஆண்டுச் செய்யக்கடவ
தல்லாமையான்; கையற வுடைத்தென - அது செயலற வுடைத்தெனக்
கருதி; ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின் - அவ்விடத்து
நுகரும் நுகர்ச்சி இவ்விடத்தும் கூடுதலான்; நின் நாடு உள்ளுவர்
பரிசிலர் - நின்னாட்டை நினைப்பர் பரிசிலர்; ஒன்னார் தேஎத்தும்
நின்னுடைத் தென - பகைவர் தேயத்திருந்தும் நின்னாடு நின்னை
யுடைத்தென்று கருதி யாதலால் எ-று.

     மற்று: அசை. வேந்தே,நீ வேண்டியது விளைக்கும்ஆற்றலையாகலின்,
விண்ணுலகத்து நுகர்ச்சி ஈண்டும் கூடலின், ஒன்னார் தேயத்திருந்தும்
பரிசிலர் நின்னாடு நின்னை யுடைத்தென்று நின்னாட்டை யுள்ளுவர்;
ஆதலான், நின்னிழற் பிறந்து நின் நிழல் வளர்ந்த எம்மளவு எவனோவென
மாறிக் கூட்டுக.

     விளக்கம்: வேந்தன் அருளி நோக்குமிடம் அவன் தானையால்
அழிவுறாது ஆக்கமெய்தும் ஆதரவு பெற்றுப் பொன்னும் பொருளும்
சிறக்கவுண்டா மென்றற்குப் “பொன் பூப்ப” என்றார். “வேண்டியது
விளைக்கும் ஆற்றலை” யென்கின்றாராதலால், அவ்வாற்றலின் எல்லையைச்
“செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண் டிங்களுள் வெயில்
வேண்டினும்” என்றார். “ஈவாரும் கொள்வாரு மில்லாத வானத்து,
வாழ்வாரே வன்க ணவர்” (குறள், 1058. மேற்.) என்பவாகலின், இங்கும்,
“உடையோ ரீதலும் இல்லோ ரிரத்தலும், கடவ தன்மையிற் கையற
வுடைத்தென”க் கூறுவாராயினர். செய்தல் நுகர்தலாதலால், செய்
நுகர்ச்சியென்றதற்கு “நுகரும் நுகர்ச்சி” யென்றார்.


39. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     இக் கிள்ளி வளவனை இப் பாட்டின்கண் மாறோக்கத்து
நப்பசலையார், “வளவ, நின்னைப் பாடுங்கால் நின் ஈகையைப் புகழ்வதும்
புகழாகாது, அது நின் முன்னோர் செய்கை; பகைவரை யடுதலும் புகழன்று,
நின் முன்னோர் தூங்கெயி லெறிந்தவர்; முறை செய்தலும் புகழன்று,
நினக்குரிய உறந்தையில் அறம் நிலை நிற்பது; சேரரது வஞ்சி நகரை
யலைக்கும் நின் வென்றி யான் பாடும் திறமன்று” என்று பாராட்டுகின்றார்.

புறவி னல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோனிறை துலாஅம் புக்கோன் மருக
ஈதனின் புகழு மன்றே சார்தல்
5. ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறல்
தூங்கெயி லெறிந்தநின் னூங்கணோர் நினைப்பின்
அடுதனின் புகழு மன்றே கெடுவின்று
மறங்கெழு சோழ ருறந்தை யவையத்