| விடாஅ என்பதனை, இரும்பிடர்த் தலையிருந் தென்பதன்பின் கூட்டிப் பொருள்கொள்ள வேண்டியிருத்தலின், மாறிக் கூட்டுக என வுரைக்கின்றார். உடைமையை மிகுத்தற்கண் செல்லும் மனத்தை மீட்டுப் பிறரது இன்மை தீர்த்தற்குச் செலுத்தல் மிக்க வன்மையுடையார்க் கல்ல தாகாமையால், தீர்த்தல் வன்மையான் என்று உரைக்கின்றார்.
4. சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி இச் சோழவேந்தன் கரிகால்வளவனுக்குத் தந்தை யென்பர். பொருநராற்றுப்படைகாரர் கரிகாலனை, உருவப் பஃறேர் இளையோன் சிறுவன் என்பர்.இளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேளிடை மகட்கொடை கொண்டான் எனத் தொல்காப்பியவுரையில் நச்சினார்க்கினியர் உரைக்கின்றார். பெருங்குன்றூர்கிழார், இவனை, நீர்நிகழ் கழனி நாடுகெழு பெருவிறல், வான்றேய் நீள்குடை வயமான் சென்னி (புறம்.266) என்று பாராட்டுகின்றார். இனி, இப் பாட்டைப் பாடிய பரணர் சங்கத் தொகை நூல்களுட் காணப்படும் பாட்டுக்கள் பலவற்றைப் பாடியவர். இவர் பாட்டுக்கள் கற்பனை வளமும் வரலாற்றுக் குறிப்பும் செறிந்தனவாகும். இப்புறநானூற்றின்கண் இவர் பாடியனவாகப் பதின்மூன்று பாட்டுக்கள் உள்ளன. அதியமான் கோவலூரை யெறிந்த காலத்து அவனை இவர் பாராட்டிப் பாடியதாக ஒளவையார் குறிக்கின்றார். இவர் மருதத்திணையை அழகொழுகப் பாடும் அமைதியுடையவர். இப் பாட்டின்கண் ஆசிரியர் பரணர், உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை, யென்ற நான்கும் போருழந்து. சிறக்கும் பெருமையைப் புகழ்ந்து, தேர்மீது தோன்றும் அவனை, நீ, மாக்கடல் நிவந்தெழுதரு,செஞ்ஞாயிற்றுக் கவினை என்றும், நீ இத்தன்மையாக, நின்னைப் பகைத்தோருடைய நாடு அழியுமென அதன் அழிவுக் கிரங்கி, தாயில் தூவாக் குழவி போல ஓவாது கூவும் என்றும் கூறுகின்றார்.
| வாள், வலந்தர மறுப்பட்டன செவ்வானத்து வனப்புப்போன்றன தாள், களங்கொளக் கழல்பறைந்தன கொல்ல லேற்றின் மருப்புப் போன்றன |
5. | தோல், துவைத்தம்பிற் றுளைதோன்றுவ | | நிலைக்கொராஅ இலக்கம்போன்றன மாவே, எறிபதத்தான் இடங்காட்டக் கறுழ்பொருத செவ்வாயான் |
10. | களிறே, கதவெறியாச் சிவந்துராஅய் | | நுதிமழுங்கிய வெண்கோட்டான் உயிருண்ணுங் கூற்றுப்போன்றன |
|