| | நீயே, பிறரோம்புறு மறமன்னெயில் ஓம்பாது கடந்தட்டவர் முடிபுனைந்த பசும்பொன்னின் அடிபொலியக் கழறைஇய | 5. | வல்லாளனை வயவேந்தே | | யாமேநின், இகழ்பாடுவோ ரெருத்தடங்கப் புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற இன்று கண்டாங்குக் காண்குவ மென்றும் இன்சொலெண் பதத்தை யாகுமதி பெரும | 10. | ஒருபிடி படியுஞ் சீறிடம் | | எழுகளிறு புரக்கு நாடுகிழ வோயே. (40) |
திணை: அது. துறை: செவியறிவுறூஉ. அவனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
உரை: நீ-; பிறர் ஓம்புறு மற மன் னெயில் ஓம்பாது - பகைவரது பாதுகாத்த மறம் நிலைபெற்ற அரண்களைப் பாதுகாவாது; கடந்தட்டு - எதிர் நின் றழித்து; அவர் முடிபுனைந்த பசும் பொன்னின் - அவரைக் கொன்று அவர் மகுடமாகச் செய்யப்பட்ட பசும்பொன்னால்; அடி பொலியக் கழல் தைஇய - நினது அடி பொலிய வீரக் கழல் செய்து புனைந்த; வல்லாளனை - வலிய ஆண்மையை யுடைய; வய வேந்தே; - யாம் - யாங்கள்; நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க - நின்னை இழித்துரைப்போர் கழுத் திறைஞ்ச; புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற - புகழ்ந்துரைப்போர் பொலிவு தோன்ற; இன்று கண்டு ஆங்குக் காண்குவம் - இன்று கண்டாற்போலக் காண்குவம்; என்றும் - எந்நாளும்; இன் சொல் - இனிய மொழியொடு; எண்பதத்தை ஆகு மதி - எளிய செவ்வியை யாகுக; பெரும-; ஒரு பிடி படியும் சீறிடம் - ஒரு பிடி கிடைக்கும் சிறிய விடம்; எழு களிறு புரக்கும் நாடு கிழவோய் - ஏழு களிற்றியானையைப் பாதுகாக்கும் நாட்டை யுடையோய் எ-று.
நாடு கிழவோய், இன் சொல் எண் பதத்தை யாகுமதி; அதனால் நின் இகழ் பாடுவோர் எருத்தம் அடங்கப், புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற, யாம் இன்று கண்டாங்குக் காண்குவ மெனக் கூட்டுக. வல்லாளனை யென்பதனுள் ஐகாரம் முன்னிலை விளக்கி நின்றது; அசைநிலையுமாம். மதி: முன்னிலை யசைச்சொல். கழல் தைஇய வல்லாளன் என்றதனாற் பகை யின்மையும், ஒரு பிடி படியுஞ் சீறிடம் ஏழு களிறு புரக்கும் நாடு கிழவோய் என்றதனால் பொருட்குறை வின்மையும் கூறியவாறாயிற்று. |