பக்கம் எண் :

114

பெருமரத்துப் பற்றவும் என இயையும் - இலையில் நெடுங்கோடு வற்றல்
பற்றவு மென்பதற்கு நெடுங்கோட்டின்கண்ணே இலையில் வற்றற்றன்மை
பற்றவுமென வுரைப்பினுமமையும்.

     வேந்தே, முன்ப, வளவ நீ இத்தன்மையை யாதலால், நிற்சினைஇயோர்
நாடு பைதன் மாக்களொடு பெருங் கலக்குற்றதெனக் கூட்டுக.
காற்றோ டெரி நிகழ்ந் தன்ன செலவிற் செருமிகு வளவ வென
மன்னவன்  புகழும்,  நிற்கனைஇயோர்  நாடு  பைதன் மாக்களொடு
பெருங்கலக் குற்றன் றென ஒன்னார் நாடழி பிரங்கியதும் கூறுதலால், இது
கொற்றவள்ளை யாயிற்று.


     விளக்கம்: உயிர்கள் அவை நின்ற உடம்பினின்று நீங்குதற்குரிய
காலம்  பார்த்து  நீக்கும்  இயல்புபற்றிக் கூற்றுவனைக் காலன் என்ப.
அதனால் “காலனும் காலம் பார்க்கும்” என்றார். வேலீண்டு தானைக் கண்
விறல் மிக்க செய்கைகளால் உயர்ந்த பெரியோரை “விழுமியோர்” என்றார்.
உற்கம், எரி கக்கும் விண்மீன்; அஃது எரிந்து வீழும் செய்தியை “உற்குதல்”
என்பவாகலின், “உற்கம் உற்கவும்” என்றார். கனலையுடைய ஞாயிறு கனலி
யெனப்பட்டது. களிறு - பன்றி; கேழற் கண்ணும் கடிவரை யின்றே”
(மரபு:35) என்றலின், கேழற் பன்றியைக் களி றென்றார். வெள்ளி -
வெண்மை நிறமுடையது. தாம் இருக்கும் இருக்கை போதிய காவலின்றி
யிருத்தலால், ஆங்கிருப்போர் அதனை யுணர்ந்து வரும் தீங்கு குறித்து
அறிவு மயங்குகின்றமை தோன்ற, “மையல் கொண்ட வேமமில்
இருக்கையர்” என்றார். முத்துதல், முத்தமிடுதல். தன்னை யின்றியமையாத
மனையவள் தனக்குளதாகும் வருத்தமறியின் பெரும் பேதுற்றுத் தன்
நெஞ்சின் வலியைச் சிதைப்ப ளென்ற அச்சத்தால் “மனையோட்கு எவ்வம்
கரத்தல்” நிகழ்வதாயிற்று. வருதிறன் - மேற்செல்லுந் திறம். படர்க்கைக்குரிய
செல்லுதல் கூறவேண்டிய விடத்துத் தன்மை முன்னிலைகட்குரிய வருதல்
என்ற சொல்லைக் கூறியது வழுவமைதியாயிற்று. மனையோள் என்ற
ஒருமையும் மாக்களென்ற பன்மையும் இயைவது, “ஏவ லிளையர் தாய் வயிறு
கறிப்ப” என்றாற் போலப் பன்மைக்கேற்ப நின்ற தென்றார். ஒரு
மனைவியை மணப்பதே பண்டைத் தமிழ் வழக்காதல் அறிக.

42. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     இப் பாட்டின்கண், ஆசிரியர் இடைக்காடனார், இவன் ஏனை
இருவேந்தர் நாடுகளைக் கவரும் கருத்தினனாய் மைந்துற்றிருப்பதும், மலை
போன்ற யானையும் கடல்போலும் தானையும் கொண்டு, புலி, தன்
குருளையைக் காப்பது போலத் தன்னாட்டை இனிது காத்துச்
செங்கோலோச்சி வருவதும், கடல் நோக்கிச் செல்லும் யாறு போலப் புலவர்
பலரும் இவன் புகழ் பாடிப் போதருவதும் எடுத்தோதிப் பாராட்டுகின்றார்.
இடைக்காடன் என்பது இயற்பெயர். இலக்கிய வளஞ் சிறந்த
பாட்டுக்கள் பல இவரால் செய்யப் பெற்றுச் சங்கத் தொகை நூல்களிற்
கோக்கப்பெற்றுள்ளன. தக்க உவமைகளைத் தொடுத்துப் பொருள்களை