| தாமற்பல்கண்ணனார் என்பார் பார்ப்பனர்; கூர்த்த புலமை நலஞ் சிறந்தவர்; தாம் செய்த தவற்றை விரைந்துணரும் நல்லறிஞர். தாமப்பல் கண்ணனார் என்றும் பாடமுண்டு. இவர் தாமல் என்னும் ஊரினர். தாமல், காஞ்சிபுரத்துக்கு மேற்கில் உள்ளதோர் நல்ல வூர். இடைக்காலச் சோழவேந்தர் காலத்தில் இவ் வூர் மிக்க சிறப்புற்று விளங்கிய தென்பதை இவ்வூரிலுள்ள கோயிற் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இக் கல்வெட்டுக்கள் இவ்வூரைத் தாமர் (S.I. Vol. V.1004. A.R. 139 of 1896) என்று கூறுதலின், இவர் பெயர் தாமர்ப்பல் கண்ணனாரென இருக்க வேண்டு மென்று துணியலாம். ஏடெழுதியோர் தாமற்பல் கண்ணனா ரென எழுதிவிட்டனர்; இவ்வூர் இப்போதும் தாமல் என்று வழங்குவது நோக்கி, இவ்வாறு கொள்ளப்பட்ட தென்று கொள்க. பல்கண்ணன் என்பது இந்திரனையும் குறிக்கும் பெயராதலின், பார்ப்பனராகிய இவர் இவ்வாறு பெயர் பெற்றனர் என்றறியலாம். இதன்கண், பார்ப்பார் நோவன செய்யார் என்று இவர் கூறுவதே, இவர் பார்ப்பனரென்பதை வற்புறுத்துகிறது. இப் பாட்டின்கண் தாமற்பல்கண்ணனார், கிள்ளிக்குத் தம்பி, நீ புறவின் பொருட்டுத் துலை புக்கவன் வழித்தோன்றல்; நின் முன்னோர் சான்றோர்க்கு நோய் செய்யார்; இச் செயல் நினக்குத் தகுவதோ? நின் பிறப்பில் ஐயமுடையேன் என்று கூறக் கேட்டு, நாணியிருந்த மாவளத்தான் செய்கைச் சிறப்பைக் கண்டு வியந்து, யான் செய்த பிழையை மனங் கொள்ளாது, நீ செய்ததையே நினைந்து நாணி யிருந்தது. பிழைத்தாரைப் பொறுப்பது நுங்கள் குடிகக்கு இயல்புகாண் என்பதைக் காட்டுகிறது. பிழை செய்தவன் யானே; நீ காவிரி மணலினும் பல்லாண்டு வாழ்க எனப் பாராட்டுகின்றார்.
| நிலமிசை வாழ்ந ரலமர றீரத் தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் காலுண வாகச் சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரு மருளக் கொடுஞ்சிறைக் | 5. | கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத் | | தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா வீகை யுரவோன் மருக நேரார்க் கடந்த முரண்மிகு திருவின் | 10. | தேர்வண் கிள்ளி தம்பி வார்கோற் | | கொடுமர மறவர் பெரும கடுமான் கைவண் டோன்ற லைய முடையேன் ஆர்புனை தெரியனின் முன்னோ ரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது | 15. | நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி | | நின்யான் பிழைத்தது நோவா யென்னினும் |
|