| நினக்கு யான் செய்த தவற்றிற்கு வெறாய் என்னினும்; நீ பிழைத்தாய் போல் நனி நாணினை - நீ தவறு செய்தாய் போல மிக நாணினாய்; தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல் - இவ்வாறு தம்மைத் தப்பியவரைப் பொறுக்கும் தலைமை; இக் குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும் என - இக் குலத்தின்கட் பிறந்தோர்க்கு எளிமை யுடைத்துக் காணும் என; காண்தகு மொய்ம்ப - காணத்தக்க வலியையுடையோய்; காட்டினை யாகலின் - அறிவித்தா யாகலின்; யானே பிழைத்தனென் - யானே தவறு செய்தேன்; மிக்கு வரும் இன்னீர்க் காவிரி எக்கர் இட்ட மணலினும் பல நின் ஆயுள் சிறக்க - பெருகி வரும் இனிய நீரையுடைய காவிரி கொழித்திடப்பட்ட மணலினும் பலவாக நின் வாழ்நாள் சிறப்பதாக எ-று.
முனிவ ரென்றது, வேணாவியோரை; அன்றி, சுடர் திரிந்த வழித்திரிந்து தவஞ் செய்யு முனிவரென்று முரைப்ப. சீரை, துலாக்கோல் தட்டு மற்றிது நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி என்றது, சூது பொருவுழிக் கையாற் கவறு புதைப்ப வெகுண்டு வட்டுக்கொண்டெறிந்தானை, இவ்வாறு செய்தல் நின் பெருமைக்குப் பொருந்துமோ? அதனால் நின் பிறப்பிலே ஓர் ஐயமுடையேன் என்ற சொல்லை. இது பொறுத்தற்கரிய பிழையைப் பொறுத்த குணவென்றியான் அரசவாகை யாயிற்று.
விளக்கம்: அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (உரி:13) என்பது தொல்காப்பியம். சுடரொடு கொட்கும் முனிவர், விண்செலன் மரபின் ஐயர் (முருகு:107) என்று நக்கீரரால் குறிக்கப்படுகின்றார். உயிர்கள்பா லுண்டாகிய அருள் மிகுதியால் சுடரொடு திரியும் தம்மினும் அருள்மிக வுடையனாதல் கண்டு; அவர் மதி மருண்டன ரென்றற்கு, முனிவரும் மருள என்றார். பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ - பருந்தினால் எறியப்படுவ துணர்ந்து அதன் இலக்கினின்றும் தப்பி எறியப்படுவது ஏறாயிற்று; வேலேறுபடத் தேளேறு மாய்ந்தாற் போல என்றாற் போல. சீர் தூக்கும் துலாக் கோல், சீரை யெனப்பட்டது. நனி நாணினை யென்புழி, மிகுதி, குடிப்பிறப்புக்கு உயர்வெடுத்து மொழிதற்கு இடந்தந்தது. தவறு கண்டு மிக நாணுதல் தலைமை மிக்க மன நலமும் அறிவு நலமும் உடையார்க்கே அமைவதாகலின், காண்தகு மொய்ம்ப என்று சிறப்பித்தார். வேணாவி - வேள்விக்கண் பெறும் அவி வேணாவி யெனப்பட்டது; வேணவா என்றாற் போல, அவரவர் தகுதிப்பாட்டை மிகுதிப்படுத்துவது வாகைத் திணையாதலால், பொறை மிக்க குணத்தை அரசவாகையில் அடக்கிக் கூறினார். |