பக்கம் எண் :

127

நும்மோ ரன்ன செம்மலு முடைத்து; ஆதலால், நண்ணார் நாண இனி
தொழுகி னல்லது பிறர்க்குத் தீதறித் தன்றோ இன்று எனக் கூட்டுக.

இக் கோவூர் கிழார் தாமும் பரிசில் வாழ்நருள் ஒருவராதலான்
வடியாநாவின் வல்லாங்குப் பாடியெனப்0 பணிந்து கூறினா ரென்க.

     விளக்கம்: படர்தல் - நினைத்தல், வள்ளியோரை நினைந்து
செல்வோர்க்கு உவமமாகக் கூறலின், அதற்கேற்ப, பழுமரந் தேர்ந்து
செல்லும் பறவையென உரை கூறினார். “பழுமரந் தேரும் பறவை போல”
(பெரும்பாண்.20) என்றார் பிறரும். கூம்பாது வீசி யென்புழி, கூம்புதல் மனம்
சுருங்குதல். பெருமிதமான நடைகொண்டு சென்று என்பது, அண்ணாந்தேகி
யெனப்பட்டது. செம்மல், தலைமை செம்மை நிலையுமாம்.

48. சேரமான் கோக்கோதை மார்பன்

     சேர வேந்தருள் ஒருவனான இவன், கோதை மார்பன் என்னும்
இயற்பெயரை யுடையவன் இவனுடைய தலைநகரம் தொண்டி யென்பது.
இவனது நாடு குறிஞ்சி வளமும், மருத வளமும், நெய்தல் வளமும்
பொருந்தியது. இவன் பொய்கையார் முதலிய புலவர் பெருமக்களை
ஆதரித்து அவராற் பாடப்பெறும் சிறப்புப் பெற்றவன். இச் சேரமானுக்கும்
கூடல் நகரிலிருந்து ஆட்சி புரிந்த பழையன் மாறன் என்ற பாண்டிய
மன்னனுக்கும் பகைமை யுண்டு. அக் காலத்தே சோழ வேந்தனான கிள்ளி
வளவன் பழையன் மாறன்பாற் பகைமைகொண்டு கூடலை முற்றுகை செய்து,
மாறனை வென்று, அவனுடைய குதிரை யானை முதலிய பலவும்
கைக்கொண்டான். தான் செய்தற்குரிய செயலைக் கிள்ளிவளவன் செய்தது
கண்டு, இச் சேரமான் பேருவகையுற்றுச் சிறந்தான். இச் சேரனது
வள்ளன்மை புலவர் பாடும் புகழ்பெற்றதாகும்.

     இப் பாட்டின்கண் பொய்கையார், கோதை மார்பன்பாற் சென்று
அவன் போரில் மேம்படும் புகழைப் பாடிப் பெருவளம் பெற்று வருபவர்,
வேறொரு புலவரைக் கண்டு, அவரை இச் சேரன்பால் ஆற்றுப்
படுக்கின்றார்.

     ஆசிரியர் பொய்கையார், இச் சேரனை இரண்டு பாட்டுக்கள் பாடிச்
சிறப்பிக்கின்றார்.  இவருடைய  ஊர்  சேரநாட்டுத் தொண்டி நகரம்.
இந்நகரத்து வாயிற் கதவில் மூவன் என்பா னொருவனது பல்லைப் பிடுங்கி
இழைத்திருக்கும் செய்தி யொன்றை இவர் குறிக்கின்றார். கோக்கோதை
மார்பனை இவர் “கானலந் தொண்டிப் பொருநன்” என்றும்,
“தெறலருந்தானைப் பொறையன்” என்றும் குறிக்கின்றார். சோழன்
செங்கணான் சேரமான் கணைக்கா லிரும்பொறையொடு செய்த போரைப்
புகழ்ந்து பாடப்பட்டுள்ள களவழி நாற்பது இவர் பாடிய தென்பர்.

கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்