| | கள்நா றும்மே கானலந் தொண்டி | 5. | அன்னோற் படர்தி யாயி னீயும் எம்மு முள்ளுமோ முதுவா யிரவல அமர்மேம் படூஉங் காலைநின் புகழ்மேம் படுநனைக் கண்டன மெனவே. (48) |
திணை: பாடாண்டிணை. துறை: புலவராற்றுப்படை. சேரமான்கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடியது.
உரை: கோதை மார்பின் கோதையானும் - கோதையுடைய மார் பிற்கணிந்த கோதையானும்; கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும் - அக் கோதையைப் புணர்ந்த மகளிர் சூடிய கோதையானும்;மாக்கழி மலர்ந்த நெய்தலானும் - கரிய கழியின்கண் மலர்ந்த நெய்தற் பூவானும்; கள் நாறும் கானலம் தொண்டி - தேன் நாறாநிற்கும் கானலையுடைய தொண்டி; அஃது எம் மூர் - அஃது எம்முடைய வூர்; அவன் எம் இறைவன் - அவன் எம்முடைய தலைவன்; அன்னோற் படர்தி யாயின் - அத் தன்மையோனிடத்தே போகின்றாயாயின்; நீயும் எம்மும் உள்ளுமோ - நீயும் எம்மையும் நினைப்பாயாக; முது வாய் இரவல - முதிய வாய்மையையுடைய இரவல; அமர் மேம்படூஉங் காலை - நீ அமரின்கண் மேம்படுங் காலத்து; நின் புகழ் மேம்படுநனைக் கண்டனம் என - நினக்கு உளதாகிய புகழை மேம்படுத்துமவனைக் கண்டேம் யாமெனச் சொல்லி எ-று.
இரவல, நீயும் அன்னோற் படர்குவையாயின், நின் புகழ் மேம்படு நனைக் கண்டன மென எம்மையும் உள்ளெனக் கூட்டுக. கண்டன மென எம்மும் உள்ளென்றாரேனும், உள்ளிக் கண்டனமெனச் சொல்லென்பது கருத்தாகக் கொள்க. மோ: முன்னிலை யசைச்சொல். நீயு மென்பதூஉ எம்மு மென்பதூஉம் எச்சவும்மை.
தலைவனது இயல்பையும் ஊரையும் கூறி, முதுவாயிரவல எம்முள் உள்ளெனத் தன் தலைமை தோன்றக் கூறினமையின், இது புலவராற் றுப்படை யாயிற்று.
விளக்கம்: இடையறாச் சேறுடைமையால், கருத்திருக்கும் கழியை மாக்கழி யென்றார்; குவளை முதலிய பூக்களின் மிகுதியால் கருத்துத் தோன்றுதல்பற்றி இவ்வாறு கூறப்பட்டதென்றுமாம். அறிவு முதிர்ந்த வாய்மையையுடைய இரவலன் (முருகு.284உரை) என்பர் நச்சினார்க்கினியர். உள்ளு மென்பதை எச்சப்படுத்தி, உள்ளிக் கண்டன மென இயைத்துக் கொள்ளவேண்டு மென்பது கருத்து. |