| 49. சேரமான் கோக்கோதை மார்பன் ஒருகால், சேரமான் கோக்கோதை மார்பனது நாட்டு நலம்பற்றி. நல்லிசைச் சான்றோரிடையே பேச்சு நிகழ்ந்தது. அவன் நாடு நானில வளமுடைய தென்பாராய், அங்கே இருந்த ஆசிரியர் பொய்கையார், இச் சேரமான் சேர நாட்டவனாயினும், முல்லையும் மருதமும் நெய்தலுமாகிய பல்வகை நாடுகளையு முடையன்; அதனால் அவனை நாடனென்றோ, ஊரனென்றோ, சேர்ப்ப னென்றோ வரையறுத்துக் கூறலாகாது; குறிஞ்சி நிலத்துப் புனவர் தட்டையைப் புடைப்பாராயின் மருத நிலத்துக் கழனியிலும் கடல்சார்ந்த நெய்த னிலத்திலும் உள்ள புள்ளினங்கள் வெருவி யெழுந்தோடும் என்று இப்பாட்டால் வற்புறுத்தினார்.
| நாட னென்கோ வூர னென்கோ பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்ப னென்கோ யாங்கன மொழிகோ வோங்குவாட் கோதையைப் புனவர் தட்டை புடைப்பி னயல | 5. | திறங்குகதி ரலமரு கழனியும் | | பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ளொருங் கெழுமே. (49) |
திணையும் துறையு மவை. துறை: இயன்மொழியுமாம். அவனை அவர் பாடியது.
உரை: நாடன் என்கோ - குறிஞ்சி நில முடைமையால் நாடனென்று சொல்லுவேனோ; ஊரன் என்கோ - மருத நிலமுடைமையால் ஊரனென்று சொல்லுவேனோ; பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ - நெய்தல் நில முடைமையால் ஒலி முழங்குகின்ற குளிர்ந்த கடலையுடைய சேர்ப்பனென்று சொல்லுவேனோ; யாங்கனம்மொழிகோ - எவ்வாறு சொல்லுவேன்; ஓங்கு வாள் கோதையை- மேம்பட்ட வாளையுடைய கோதையை; புனவர் தட்டை புடைப்பின் - புனங்காப்போர் கிளிகடி கருவியைப் புடைப்பின்; அயலது இறங்கு கதிர் அலமரு கழனியும் - அப் புனத்திற் கயலதாகிய வளைந்த நெற்கதிர் சுழலும் வயலின் கண்ணும்; பிறங்கு நீர்ச் சேர்ப்பினும் - மிக்க நீரையுடைய கடற்கரையின்கண்ணும் உளவாகிய; புள் ஒருங்கு எழும் - புட்கள் சேர வெழுமாதலான் எ-று.
புனவர் தட்டை புடைப்பின் எனக் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் ஏற்பக் கூறினமையான், நாட னென்பதூஉம் அவ்விரண்டு நிலத்துக்கும் கொள்ளப்படும்; எனவே, முல்லை நிலமு முடைய னென்றவாறாம். புனவர் தட்டை புடைப்பின் கழனியிலும் சேர்ப்பினும் புள்ளெழு மாதலால், கோதையை யாங்கன் மொழிகோ வெனக் கூட்டுக.
|