பக்கம் எண் :

130

இது. நானிலமு முடைய னாதலிற் பெருஞ் செல்வ முடையன்; நீ
அவன்பாற் செல்லென ஆற்றுப்படுத்தவாறு; அவனது இயல்பைப்
புகழ்ந்தமையான் இயன்மொழியு மாயிற்று.

     விளக்கம்: குறிஞ்சி, முல்லை நிலங்கட்குரிய தலைமகனை நாடன்
என்றும்,மருத நிலக் கிழவனை ஊர னென்றும், நெய்தல் நிலத் தலைவனைச்
சேர்ப்ப னென்றும் கூறும் வழக்குப்பறி, “நாட னென்கோ ஊர னென்கோ”
என்றதற்கு இவ்வாறு உரை கூறப்பட்டது. “கணங் கொளருவிக் கான்கெழு
நாடன், குறும்பொறை நாடன் நல்வய லூரன், தண்கடற் சேர்ப்பன்” (ஐங்:
183) எனப் பிறரும் கூறுதல் காண்க. பாலை விளைநல முடையதன்
றாதலால், அதனை யொழித்து ஏனை நானிலங்களே கூறப்பட்டன.

50. சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை

     இப் பெருஞ்சேர லிரும்பொறை செல்வக் கடுங்கோ வாழியாதன்
மகன்.இவன் தாய் வேளாவிக் கோமான் பதுமன் தேவி யெனப்
பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுகிறது. இவன் தகடூருக்குரிய அதியமானொடு
பொருது அவனது தகடூரை யெறிந்து கொண்டதனால் இவ்வாறு
சிறப்பித்துக் கூறப்படுகின்றான். இவனைப் பதிற்றுப்பத்திற் காணப்படும்
எட்டாம் பத்தைப் பாடிய அரிசில்கிழாருக்கு இவன் தன் கோயிலாளுடன்
வெளிப் போந்து கோயிலில்உள்ளனவும் அரசுங் கொள்கவென
வழங்கினான். அவர் அவற்றை ஏலாது வேறாகக் கொடுத்த ஒன்பது
நூறாயிரம் காணத்தைப் பெற்றுக்கொண்டு தமக்கு இவன் கொடுத்த
அரசினை இவனையே மேற்கொண்டாளுமாறு வேண்டி அமைச்சுப்
பூண்டார். இவன் பதினேழியாண்டு அரசு வீற்றிருந்தான். இவன் ஆட்சிக்
காலத்தே,புலவர் பலரும் இவனால் உயிரினும் சிறந்தாராகப் பாராட்டப்
பட்டனர். ஒருகால், இவனைக் காண்பதற்கு வந்திருந்த மோசிகீரனார்
என்னும் சான்றோர், வெற்றி முரசு வைக்கும் கட்டிலின்மேல் தன்னை
யறியாது கிடந்து உறங்கிவிட்டார். வெற்றித் திரு வீற்றிருக்கும்
கட்டிலின்மேல் வேறு பிறர் இருந்து உறங்குவதுகுற்றமாகும். அது
செய்வோர், கொலைத் தண்டத்துக் குரியவராவர். இஃது அக்கால அரசு
முறை. இதனை யறியாதவர் புலவர். அவர் உறங்கியதை யறிந்த
இவ்விரும்பொறை அவரைக் கொலை புரியாது, இனிதே உறங்குமாறு
அவர்க்குக் கவரிகொண்டு வீசலுற்றான். இதனால், இவன் வெற்றித் திருவும்
பிறவும் புலவர் புலமை மாண்பு நோக்கத் தாழ்ந்தன வெனக் கருதும்
கருத்தினனாதலை நன்கறியலாம்.

     இப் பாட்டின்கண். முரசு கட்டிலின்கண் அறியாது ஏறி உறங்கிக்
கிடந்த தனக்கு உறக்கம் தெளியுங்காறும் சாமரை வீசிய சேரமானது
பேரருளை வியந்து, மோசிகீரனார், “முரசினுடைய மென்பூஞ் சேக்கைக் கண்
அறியா தேறிய என்னை, வாளால் இருபாற் படுப்பதைச் செய்யாதருளிய
தொன்றே நீ தமிழ் முழுதும் நன்கறிந்த சிறப்புக்குப் போதிய சான்றாகும்.
அதனோ டமையாது, என்னை யணுக வந்து, முழவுத்தோள் கொண்டு, கவரி
வீசியதற்குக் காரணம் யாதுகொல்லோ? இவ்வுலகத்தே இசையுடையோர்க்
கல்லது உயர்நிலை யுலகத்துள் உறைவிடம் இல்லையெனச் சான்றோர்