பக்கம் எண் :

131

கூறுதலை விளங்கக் கேட்ட கேள்விப்பயனோ நீ இங்கே இதனைச்
செய்தற்குக் காரணம்” எனக் கூறிப் பாராட்டுகின்றார்.

ஆசிரியர் மோசி கீரனார், மோசி யென்பாருடைய மகனார்போலும்
இனி, மோசு கீரனார் என்று கொண்டு, மோசுகுடி யென்னும் ஊருண்மை
பற்றி அவ் வூரினராகக் கருதுபவரும் உண்டு. இவர், சேர நாட்டு
வேந்தனையே யன்றி, அவன் நாட்டிற்கடுத்த கொண்கான நாட்டுத்
தலைவனையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். அவன் கொண்கானங் கிழான்
எனப்படுவன். “உலகத்து வாழும் மக்கட்கு நெல்லும் நீருமன்று உயிர்;
மக்கள் மன்னனையே உயிராகக்கொண்டு வாழ்வர்; அதனால், வேந்தன்,
“யான் உலகிற் குயிராவேன் என்றறிந் தொழுகுதல் கடமையாகும்” என்று
பெருஞ்சேர லிரும்பொறைக்கு வற்புறுத்தி யுரைத்தவர் இவரே. கொண்கானங்
கிழானைக் காணச்சென்ற காலத்து, “முடிவேந்தர்பால் நெருங்கிப் பயிலும்
இவர், குறுநிலக் கிழாரைப் பாடிப் பரிசில் பெறல் வேண்டாவே” என்றொரு
கேள்வி யெழுந்தது. அதற்கு விடையிறுப்பார் போல, கடலருகே வாழினும்
நீர் வேட்கையுற்றோர் சிற்றூறலையே நாடுநர்; அதுபோல, அசரர்
உழையராகிய வழியும் புலவர் உயர்ந்த வள்ளியோரையே விரும்பிச்
செல்வர்; எனக்கு ஈயென இரத்தல் அரிதாயினும் இக்கொண்கானம் பாடுதல்
எளிதுகாண்” என்று பாடுகின்றார்.

மாசற விசித்த வார்புறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார்
பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக்
5. குருதி வேட்கை யுருகெழு முரசம்
மண்ணி வாரா வளவை யெண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியா தேறிய வென்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வா யொழித்ததை
10. அதூஉஞ் சாலுநற் றமிழ்முழு தறிதல்
அதனொடு மமையா தணுக வந்துநின்
மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென
வீசி யோயே வியலிடங் கமழ
இவணிசை யுடையோர்க் கல்ல தவண
15. துயர்நிலை யுலகத் துறையு ளின்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசினீ யீங்கிது செயலே. (50)

     திணை: அது. துறை: இயன்மொழி. சேரமான் தகடூரெறிந்த
பெருஞ்சேர லிரும்பொறை முரசு கட்டி லறியா தேறிய மோசிகீரனைத்
தவறு செய்யாது, அவன் துயிலெழுந்துணையும் கவரி கொண்டு
வீசீயானை மோசிகீரனார் பாடியது.