பக்கம் எண் :

132

     உரை: மாசற விசித்த - குற்றந் தீர வலித்துப் பிணித்த;
வார்புறுவள்பின் - வாரப்பட்ட வாரையுடைய; மைபடு மருங்குல்
பொலிய - கருமரத்தாற் செய்தலான் இருட்சி பொருந்திய பக்கம்
பொலிவு பெற; மஞ்ஞை ஒலி நெடும் பீலி ஒண் பொறி - மயிலினது
தழைத்த நெடிய பீலியால் தொடுக்கப்பட்ட ஒள்ளிய பொறியை
யுடைத்தாகிய; மணித் தார் - நீல மணிபோலும் நிறத்தையுடைய
தாரை; பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டி -
பொற்றளிரையுடைய உழிஞையுடனே பொலியச் சூட்டப்பட்டு; குருதி
வேட்கை உரு கெழு முரசம் - குருதிப் பலிகொள்ளும்
விருப்பத்தையுடைய உட்குப் பொருந்திய வீரமுரசம்; மண்ணி வாரா
அளவை - நீராடி வருவதன் முன்னே; எண்ணெய் நுரை முகந்
தன்ன மென்பூஞ் சேக்கை - எண்ணெயினது நுரையை முகந்தாற்
போன்ற மெல்லிய பூவையுடைய கட்டிலின்கண்ணே; அறியா தேறிய
என்னை - இதனை முரசு கட்டிலென்ப தறியாது ஏறிக் கிடந்த
என்னை; தெறு வர இருபாற் படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை
- வெகுட்சி தோன்றஇரு கூறாக்கும் நின்னுடைய வாளை வாயை
மாற்றியதாகிய; அதூஉம் சாலும் - அதுவும் அமையும்; நல் தமிழ்
முழு தறிதல் - நல்ல தமிழ் முழுதும் அறிந்தமைக்கு; அதனொடும்
அமையாது - அவ் வெகுட்சி யொழிந்து அதனாலும் அமையாதே;
அணுக வந்து - குறுக வந்து; நின் மதனுடை முழவுத் தோள் ஓச்சி
- நினது வலியையுடைய முழவுபோலும் தோளை யெடுத்து;
தண்ணென வீசியோய் - சாமரத்தாற் குளிர வீசினாய்; வியலிடம்
கமழ - இவ் வகன்ற உலகத்தின்கண்ணே பரக்கும் பரிசு; இவண்
இசை யுடையோர்க் கல்லது - இவ் வுலகத்துப் புகழுடையோர்க்
கல்லது; அவணது - அவ்விடத்தாகிய; உயர் நிலை உலகத்துறையுள்
இன்மை - உயர்ந்த நிலைமையுடைய உலகத்தின் கண்
உறைதலில்லாமையை; விளங்கக் கேட்ட மாறு கொல் - தெரியக்
கேட்ட பரிசாலேயோ; வலம் படு குருசில் - வெற்றி பொருந்தப்பட்ட
தலைவர்; நீ ஈங்கு இது செயல் -நீ இவ்விடத்து இச் சாமரையை
வீசுதல், அதற்குக் காரணம் சொல்லுவாயாக எ-று.

     சூட்டி யென்பதனைச் சூட்ட வென்று திரிப்பினு மமையும்.
உழிஞை, கொற்றான்; அது குட நாட்டார் வழக்கு முழவுத்தோளோச்சி
யெனவும் தண்ணென வீசியோ யெனவும் கூறியவாற்றால் சாமரை
யென்பது பெற்றாம். கமழ்தல். ஈண்டுப் பரத்தற்பொருட்டாய் நின்றது.
தமிழென்பதற்குத் தமிழ்நாடெனினுமமையும்.

குருசில், நீ இது செய்தல், இசையுடையோர்க் கல்லது உறையுனின்மை
விளங்கக்   கேட்ட   மாறுகொல்  எனக்    கூட்டுக.   எண்ணென்பது
கருத்தெனவுமாம். எண்ணி யென்று பாடமாயின் கருதி யென்க.