| குணம் கொல்லாது என்பதற்கு, முறைமை யழிய நீ வேண்டியவாறு செய்யா தெனினுமாம். பூந் தார் மாற, நெடுந்தகாய், நான்குடன் மாண்டதாயினும் அரசின் கொற்றம் அறநெறி முதற்கு; அதனால் கோல் கோடாது குணங் கொல்லாது, ஆண்மையும் சாயலும் வண்மையு முடையையாகி இல்லோர் கையற நீ மணலிலும் பலகாலும் நீடு வாழிய வெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: கொளீஇ - கொளுத்தி; கொள்வித் தென்பது கொளுத்தி யென வந்தது; வருவித் தென்பது வருத்தி யென இன்றும் வழங்குவது போல வென்க. மூவெயில், மூன்றாகிய மதில்; பொன் வெள்ளி இரும்பெனப் புராணங்கள் கூறும். ஓரம்பே கொண்டு மூவெயிலும் எய்தாரென வரலாறு கூறலின், ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றி யென்றார். கறைமிட றணியலு மணிந்தன்று என்ற விடத்துக் கறை கறுப்புநிறங் குறிப்பதாக உரை கூறினமையின் ஈண்டும் கறைமிடற்றண்ணல் என்றதற்குக் கரிய நிறஞ் சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவன் என்று உரை கூறினார். வேந்தெனப் பொதுப்படக் கூறினமையின் மூவேந்தரையும் கொண்டார். நெஞ்சுடைய புகல் மறவர் என்ற விடத்துப் புகல்வது விரும்புத லென்னும் பொருளதாகலின், அதற்கேற்பப் போரை விரும்பும் மறவர் என்றார்; போரெனிற் புகலும் புனை கழல் மறவர் (புறம்:31) எனப் பிறரும் கூறுதல் காண்க. நம ரெனக் கோல் கோடுவது இவ்வா றென விளக்கவேண்டி, இவர் நம்முடையரென.......பொறுத்துக் கொள்ளுவது என்பது தோன்ற விரித்துக் கூறினார். சாயல், மென்மை கையற இல்லையாக; இல்லோர்க்கு இடமில்லையாக; கை, இடம். இடமில்லாமையாவது இன்மையுடையோர் இலராய் எல்லோரும் செல்வராக என்பதாம். செந்தில், திருச்செந்தூர், நுண் மணற் குவை திரை திரையாகத் திரைத்துத் தோன்றுவது பற்றி, வடுவாழ் எக்கர் எனப்பட்டது. 56. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறன் இப் பாண்டி வேந்தனான இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தெறலும் அளியும் வண்மையும் நிரம்ப வுடையனாய், மிக்க புகழ் கொண்டு விளங்குதல் கண்ட மருதன் இளநாகனார், தெறல் முதலியன வுடையனாய் நெடுங் காலம் வாழ்க வெனப் பாராட்டி வாழ்த்தியது போலக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், இப்பாட்டின்கண் இவனை உலகங்காக்கும், நால்வராகிய மணிமிடற் றிறைவனும், பலராமனும், திருமாலும், முருகவேளும் செயல் வகையில் ஒப்ப ரெனக் கூறி, வேந்தே, இன்ப நுகர்ச்சிக்கண் குறைவிலனாய் உலகில் இருணீக்கி யொளி விளக்கும் ஞாயிறும் திங்களும் போல நிலைபெற்று வாழ்க வென வாழ்த்துகின்றார். நக்கீரனார் மதுரைக் கணக்காயனார்க்கு மகனாராவார், சங்ககாலத்துப் புலவர் நிரலில் தலைமை பெற்றவர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனது ஆலங்கானப் போரையும் பொலம் பூண் கிள்ளி யென்பவன், கோய ரென்பாரை வென்று நிலங் கொண்ட திறமும், சேரமான் கோதை மார்பனுக்குப் பகையாய் இறுத்த கிள்ளிவளவனைப் பழையன் மாறன் என்பான் வென்று சேரனுக்கு உவகை |