பக்கம் எண் :

146

யெய்துவித்த திறமும், பிறவும் இவரால் குறிக்கப்படுவனவாகும். இவர்
மதுரையைச் சேர்ந்தவராதலின், அதனை வாய்த்த விடங்களில், “அரண் பல
கடந்த முரண்கொள் தானை, வாடா வேம்பின் வழுதி கூடல்” “பொன்மலி
நெடுநகர்க் கூடல்” “மாடமலி மறுகிற் கூடல்” என்று சிறப்பித்துரைப்பர்.
மருங்கூர்ப் பட்டினம், காவிரிப்பூம் பட்டினம், முசிறி, கருவூர், உறையூர்,
முதலிய வூர்களும் ஆங்காங்கு இவரால் சிறப்பிக்கப்படுகின்றன. வேள்
பாரியைத் தமிழ்வேந்தர் மூவரும் நெடுங்காலம் முற்றுகையிட்டிருந்த
காலத்துக் கபிலர் கிளிகளைப் பயிற்றி, வெளியே விளைபுலங்களிலிருந்து
நெற்கதிர் கொணர்வித்து, உணவுக் குறைவுண்டாகாவாறு பேணிக் காத்த
செய்தியை இவர் குறிக்கின்றார். கபிலரை இவர் “உலகுடன் திரிதரும்
பலர்புகழ் நல்லிசை, வாய் மொழிக் கபிலன்” எனச் சிறப்பிக்கின்றார். தூங்க
லோரியார் என்னும் புலவர் இவர் காலத்தே சிறப்புற்றிருந்த செய்தி இவர்
பாட்டால் விளங்குகிறது. இவருடைய பாட்டுக்கள் இலக்கியச் செறிவுடையன.
உறையூர்க்குக் கிழக்கேயுள்ள பிடவூருக்கு ஒருகால் சென்று, ஆங்கிருந்த
பெருஞ் சாத்தன் என்பானைக் கண்டார். அவன் இவரைத் தன்
மனைவிக்குக் காட்டி, “என்பால் செய்யும் அன்பளவே இவர்பாலும் செய்க”
என்றான். அதனால் வியப்பு மிகக் கொண்ட நக்கீரர், “தன் மனைப்
பொன்போல்   மடந்தையைக்   காட்டி,  இவனை என்போல்
போற்றென்றோனே” யென்று பாடிப் பரவினார். இவர் பாடியுள்ள பொருண்
மொழிக் காஞ்சி ஒவ்வொரு செல்வ மகனும் படித்து இன்புறுதற்குரியது.
இவரைப் பற்றிக் கூறப்படும் வரலாறுகள் பல.

ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்
கடல்வளர் புரிவளை புரையு மேனி
அடர்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும

5. மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பின்
10. தோலா நல்லிசை நால்வ ருள்ளும்
கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
வலியொத் தீயே வாலி யோனைப்
புகழொத் தீயே யிகழுந ரடுநனை
முருகொத் தீயே முன்னியது முடித்தலின்
15.ஆங்காங் கவரவ ரொத்தலின் யாங்கும்
அரியவு முளவோ நினக்கே யதனால்
இரவலர்க் கருங்கல மருகா தீயா
யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல்