| விளக்கம்: கடலிற் செல்லும் திமிலின்கண் இரவுக் காலங்களில் விளங்கேற்றுதல் மரபாதலால், அவ்விளக்கு வானத்தில் இரவில் விளங்கும் செவ்வாய் மீனுக்கு உவமமாயிற்று. முழுத்திங்கள் தொழப்படாதாயினும் தொழுதமை தோன்ற, வல் விரைந் தென்றார். கல்நாடு - மலைநாடு. ஆழ்ச்சி - குழிகளில் சகடம் புதைந்து ஆழ்தல். மறைக் கொண்ட என்புழி, மறை முதனிலைத் தொழிற்பெயர். நான்கனுருபு விரித்து மறைத்தற்குக் கொண்ட என உரை கூறப்பட்டது. உயர்ந்த பொருட்கு மிகத் தாழ்ந்த தொன்றையுவ மித்தல் இறப்ப விழிந்த ஆனந்த வுவமை யென்னும் குற்றமாம். அரசியற் பொறையைத் தாங்கிப் பகைக்கூழள்ளற்படாது உய்க்கும் வேந்தற்கு நோன்பகடு சிறந்த வுவமையாதலின், இது குற்றமன் றென்பதாம்.
61. சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி சோழன் நலங்கிள்ளியின் மைந்தன் சேட்சென்னி யென்பவனாகும். இவன் சிறந்த வீரன். இவன் இலவந்திகைப் பள்ளியில் இருந்து உயிர் துறந்தமைபற்றி இவ்வாறு கூறப்படுகின்றான். இவ்வேந்தனை யணுகியிருந்து அவனால் சிறப்பிக்கப்பட்டவராதலின், கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் இவன் நாட்டு இயல்புகளையும் இவனுடைய விறலையும் விரித்துக் கூறுகின்றார். ஒருகால் இவனது வெற்றி நலத்தைச் சிலர் வினவினாராக, அவர்கட்கு இப்பாட்டால் இக் குமரனார், இச் சென்னியைப் பகைப்போர் உளராயின், அவர்க்கு எய்தக்கடவ துன்பத்தை யவர்தாமே யறிகுவர்; அவனொடு வழுவின்றிப் பொருதவர் வாழக் கண்டதில்லை; அவனது அருள் பெற்றோர் வருந்தக் கண்டது மில்லை என்று அறிவுறுத்தினார். இவன் காலத்தே, சேரநாட்டைக் குட்டுவன் கோதை ஆட்சி புரிந்தான். இவனுக்குச் சிறிது முன்னோ பின்னோ குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் சோழநாட்டையாண்டான். சோழர் படைத்தலைவன் ஏனாதி திருக்கிள்ளி யென்பான், இவன் காலத்தும் சிறப்புற்று விளங்கினான். | கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர் சிறுமா ணெய்த லாம்பலொடு கட்கும் மலங்குமிளிர் செறுவிற் றளம்புதடிந் திட்ட பழன வாளைப் பரூஉக்கட் டுணியல் | 5. | புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை யாக | | விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி நீடுகதிர்க் கழனி சூடுதடு மாறும் வன்கை வினைஞர் புன்றலைச் சிறாஅர் தெங்குபடு வியன்பழ முனையிற் றந்தையர் | 10. | குறைக்க ணெடும்போ ரேறி விசைத்தெழுந்து | | செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும் |
|