| யாங்கள்; அவன் எழு வுறழ் திணி தோள் வழுவின்று மலைந்தோர் - அவனுடைய கணைய மரத்தோடு மாறுபடும் திணிந்த தோளைத் தப்பின்றாக மாறுபட்டோர்; வாழக் கண்டன்றும் இலமே - வாழக்கண்டது மிலம்; தாழாது திருந்தடி பொருந்த வல்லோர் - விரைய அவனது திருந்திய அடியை அடையவல்லோர்; வருந்தக் காண்டல் அதனினும் இலமே - வருந்தக் காண்டல் அவ் வாழக்கண்டதனினும் இலம் எ-று.
தளம்பு என்றது சேறு குத்தியை. வழுவின்று மலைதலாவது வெளிப்பட நின்று மலைதல்.
விளக்கம்: தளம்பு. சேற்றினைக் குழப்பிக் கட்டிகளை யுடைத்துச் செம்மை செய்யும் கருவி. அது செல்லுங்கால் சேற்றிற் கிடக்கும் வாளை மீன் அறுபட்டுத் துண்டுபடுமாறு தோன்ற. தளம்பு தடிந்திட்ட பரூஉக்கண் துணியல் என்றார். கண்ணுறை வியஞ்சனம்; சோற்றோடு துணையாய் உண்ணப்படும் காய் கறிகள் உணவை மிக வுண்டதனால் மயங்கிச், சூட்டினை இடுமிட மறியாது தடுமாறுதல் உண்டாயிற்று. செழுங்கோட் பெண்ணை யென்புழி, கோள் என்றது குலை பொருந்தி எளிதிற் கொள்ளத்தக்க நிலையிலிருப்பதை யுணர்த்தி நின்றது. உறுவது, உறுதி யென நின்றது; தபுவது தபுதி யென வருதல் போல. தாழ்த்த வழி, சீற்றத்துக் கிலக்காய்க் கொல்லப்படுவ ரென்பது கருதி, தாழாது என்றார். அது, வாழக் காண்டல். 62. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் போர்வன்மையும், கொடைச் சிறப்பும் மிக வுடையவன். பதிற்றுப்பத்து ஆறாம் பத்தின் பதிகம் கூறும் சேரமான் இவனாயின், இவற்குப் பின் அரசுகட்டி லேறியவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனாவான். வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி பெருநற்கிள்ளி யெனவும் வழங்கப்படுவன் போலும். இவ்விரு பெருவேந்தர்க்கும் மண்ணாசையின் விளைவாகப் போருண் டாயிற்று. கழாத்தலையாராகிய சான்றோர் சேரலாதன் போர்க்களத் திருப்பதை யறிந்து அவனைக் காண்பது கருதிச் சென்றார். அவர் சென்று காணும்போது இரு வேந்தரும் பொருது விழுப்புண் பட்டு வீழ்ந்து கிடந்தனர். சேரமான் உயிர் நீங்குந்தறுவாயி லிருப்பக் கண்ட அச் சான்றோர், அவன் புகழ்பாடி வியந்தாராக, அவன் தன் கழுத்திலிருந்த ஆரத்தை வழங்கி இறவாப் புகழ் பெற்றான். சிறிது போதில் அவன் உயிரும் நீங்கிற்று. இருவரும் வீழ்ந்து கிடத்தலைக் காணுந்தோறும் கழாத்தலையார், ஆறாத்துயர மெய்தி, இப்பாட்டால், செருமுனிந்து, அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் தாமும் மாய்ந்தனர்; அவரை நிழல் செய்த குடைகளும் துளங்கின; அவர் தம் வெற்றியும் குடையும் நுவலும் முரசமும் ஒழிந்தன; போர் மறவர் தாமும் எஞ்சாது வீழ்ந்தமையின் அமரும் உடன் வீழ்ந்தது. இவர்தம் பெண்டிரும் பாசடகு மிசைதல், பனிநீர் மூழ்கல் முதலிய கைம்மைச் செயல்களை விரும்பாது இவர்தம் மார்பகம் பொருந்தி உயிர் துறந்தனர்;
|