| உரை: வரு தார் தாங்கி அமர் மிகல் யாவது - வருகின்ற தூசிப்படையைத் தடுத்துப் போரின்கண் ஒருவர் ஒருவரை வெல்வே மென மிகுதல் எங்ஙனமாவது; பொருது ஆண்டொழிந்த மைந்தர் - பொருது அக்களத்தின்கட்பட்ட வீரரது; புண் தொட்டுக் குருதிச் செங்கை - புண்ணைத் தோண்டி அவ்வுதிரந் தோய்ந்த செய்ய கையால்; கூந்தல் தீட்டி - தமது மயிரைக் கோதி; நிறங் கிளர் உருவிற் பேஎய்ப் பெண்டிர் - நிறமிக்க வடிவையுடைய பேய் மகளிர்; எடுத் தெறி அனந்தற் பறைச் சீர் தூங்க - மேன்மேலும் கொட்டுகின்ற மந்தமான ஓசையையுடைய பறையினது தாளத்தே யாட; பருந்து அருந்துற்ற தானையொடு - பருந்து ஊனைத் தின்னப் பொருந்திய படையானே; செருமுனிந்து - போரின்கண் வெகுண்டு; அறத்தான் மண்டிய மறப்போர் வேந்தர்தாம் மாய்ந்தனர் - அறத்தின் அடர்த்துச் செய்த வலிய போரையுடைய அரசர் இருவரும் பட்டார்; குடை துளங்கின - அவர் கொற்றக் குடையும் தளர்ந்தன; உரை சால் சிறப்பின் முரைசு ஒழிந்தன -புகழமைந்த தலைமையையுடைய முரசு வீழ்ந்தன; பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம் - பல நூறாக அடுக்கப்பட்ட பதினெண் பாடை மாக்களாகிய படைத் தொகுதி; இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை- இடமில்லை யாம்படி தொக்க அகன்ற இடத்தையுடைய பாடிவீட்டின்கண்; களம் கொளற்கு உரியோர் இன்றி - போர்க்களம் தமதாக்கிக் கொள்ளுதற் குரியோர் ஒருவரின்றி; தெறுவர உடன் வீழ்ந்தன்றால் அமர் - கண்டார்க்கு அச்சம் வர வுடனே மடிந்தது பூசல்; பெண்டிரும் பாசடகு மிசையார் - அவர் பெண்டிரும் பச்சையிலை தின்னாராய்; பனி நீர் மூழ்கார் - குளிர்ந்த நீரின்கண் மூழ்காராய்; மார்பகம் பொருந்தி - அவர் மார்பகத்தைக் கூடி; ஆங்கு அமைந்தனர் - அக் களத்தின் கண்ணே உடன் கிடந்தார்; வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற வுணவினோரும் - வாடாத கற்பகத்தின் தாரினையும் இமையாத கண்ணினையும் நாற்றமாகிய உணவினையுமுடைய தேவர்களும்; ஆற்ற அரும் பெறல் உலகம் நிறைய விருந்து பெற்றனரால் - மிகப் பெறுதற்கரிய உலகம் நிரம்ப விருந்து பெற்றார்; பொலிக நும் புகழ் - அதனால் பொலிக நுங்கள் புகழ் எ-று.
அனந்தல், பறை கொட்டுவார் கை புண்படுதலின் மந்தமாக ஒலித்தல். அறத்தின் மண்டுதலாவது, படை பட்டபின் பெயராது சென்று இரு பெரு வேந்தரும் பொருதல். பட்ட இரு வேந்தரும் அக் களத்துக் கிடக்கின்ற படியைக் கண்டு, தம் மனத்தோடு நொந்து கூறுகின்றாராதலான், நும் புகழென முன்னிலையாக்கிக் கூறினார். வேந்தர் மாய்ந்தனர்; குடை துளங்கின; முரசு ஒழிந்தன; அமர் உடன் வீழ்ந்து; பெண்டிரும் மார்பகம் பொருந்தி அமைந்தனர்; நாற்ற உணவினோரும் விருந்து பெற்றனர்;
|