| பசி - ஈத்தளிப்போ ரில்லாமையால் பசி; அரையது வேற்றிழை நுழைந்த வேர் நனை சிதா அர் - அரையதாகிய வேற்றிழை யூடுபோன வேர்ப்பால் நனைந்த சீரையை; ஓம்பி உடுத்த உயவற் பாண - அற்ற மறைத்துடுத்த வருத்தத்தையுடைய பாண; பூட்கை யில்லோன் யாக்கை போல - மடியால் மேற்கோ ளில்லாதவன் உடம்பை யொப்ப; பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை - பெரிதாகப் புற்கென்ற மிகப் பெரிய சுற்றத்தை யுடையையாய்; வையக முழுதும் வளைஇ - உலக மெல்லாவற்றையும் சூழ்வந்து; என்னைப் பையென வினவுதியாயின் - பின்னை என்னை மெல்ல வறுமை தீர்ப்பார் யார் எனக் கேட்கின்றாயாயின் கேளாய்; மன்னர் அடு களிறு உயவும் - வேந்தரது கொல் யானை புண்பட்டு வருந்தும்; கொடி கொள் பாசறை - கொடி யெடுக்கப்பட்ட பாடிவீட்டின் கண்; குருதிப் பரப்பில் கோட்டு மா தொலைச்சி - குருதிப் பரப்பின்கண்ணே யானையைக் கொன்று; புலால் களஞ் செய்த கலாஅத் தானையன் - புலாலையுடைய போர்க்களத்தை யுண்டாக்கிய போர் செய்யும் படையை யுடையவன்; பிறங்கு நிலை மாடத்து உறந்தையோன் - உயர்ந்த நிலையை யுடைத்தாகிய மாடத்தையுடைய உறையூரிடத்திருந்தான்; பொருநர்க் கோக்கிய வேலன் - அவன் பொருவோர் பொருட் டெடுக்கப்பட்ட வேலை யுடையவனாய்; ஒரு நிலைப் பகைப்புலம் படர்தலும் உரியன் - ஒரு பெற்றியே பகைவர் நாட்டின்கண் போதலு முரியன்; தகைத்தார் - சுற்றப்பட்ட மாலையையும், ஒள்ளெரி புரையும் உருகெழு பசும்பூண் - ஒள்ளிய எரியை யொக்கும் நிறம் பொருந்திய பசும்பொன்னாற் செய்யப்பட்ட பூணினையுமுடைய; கிள்ளி வளவற் படர்குவையாயின் - கிள்ளி வளவனிடத்தே செல்குவையாயின்; நெடுங் கடை நிற்றலும் இலை - அவனது நெடிய வாயிலின்கண் காலம் பார்த்து நிற்றலும் உடையை யல்லை; கடும் பகல் - விளங்கிய பகற்பொழுதின்கண்; தேர் வீசு இருக்கை ஆர நோக்கி - அவன் பரிசிலர்க்குத் தேர் வழங்கியிருக்கும் இருப்பை நின் கண்ணாரப் பார்த்து; நீ அவற் கண்ட பின்றை - நீ அவனைக் கண்ட பின்பு; பூவி னாடும் வண்டு இமிராத் தாமரை சூடா யாதல் - பூவின்கணாடும் வண்டு ஊதாத பொற்றாமரைப் பூவைச் சூடாயாதல்; அதனினும் இலை - அந் நெடுங்கடை நிற்றலினும் ஊடையை யல்லை; அதனால் ஆண்டுச் செல்வாயாக எ-று.
தகை தார், தகைத்தா ரென நின்றது; மேம்பட்ட தாருமாம். பாண, ஒக்கலையாய் வளைஇ வினவுதியாயின், தானையை யுடையவன், உறந்தை யோன், அவன்பாற் படர்குவையாயின், நின் கைவது யாழாதலானும், மெய்யது பசியாதலானும் நெடுங்கடை நிற்றலுமில்லை: நீ அவற்கண்ட பின்றைத் தாமரை சூடாயாதல் அதனினு மிலையென மாறிக் கூட்டுக.
|