| நாட்டத் தறுகாற் பறவை - மணத்தை யாராயும் ஆராய்ச்சியையுடைய வண்டு; சிறு வெள்ளாம்பல் ஞாங்கர் ஊதும் - சிறிய வெளிய ஆம்பலின்மீதே யூதும்; கை வள் ஈகைப் பண்ணன் சிறு குடி - கையான் வள்ளிய தொடையையுடைய பாணனது சிறுகுடிக்கண்; பாதிரி கமழும் ஓதி - பாதிரி நாறும் மயிரினையும்; ஒண்ணுதல் இன்னகை விறலியொடு - ஒள்ளிய நுதலினையும் இனிய முறுவலையுமுடைய விறலியுடனே; மென் மெல இயலிச் செல்வை யாயின் - மெல்ல மெல்ல நடந்து செல்வையாயின்; செல்வை யாகுவை - செல்வத்தையுடைய யாவை; விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர் - விறகைக் காட்டினின்றும் ஊரகத்துச் செலுத்தும் மாந்தர் அக் காட்டகத்து விழுப் பொருள் எடுத்துக்கொண்டாற் போல்வதொரு; தலைப்பாடு அன்று - நேர்பா டன்று; அவன் ஈகை அவனது வண்மை; நினைக்க வேண்டா - அது பெறுவேன்கொல் என்று கருதவேண்டா;அவன் தாள் வாழ்க - அவனது தாள் வாழ்க எ-று.
பாண, தணிக எனக் கூறி வினவலானா இரவல, விறலியொடு மென்மெல இயலிச் செல்குவையாயி னென இயையும்; வியனகர்ச் செல்வையாயி னெனவு மமையும். நகரையுடைய நாடென இயைப்பாரு முளர். விறகொய் மாக்கள் பொன்பெற் றன்னதோர் தலைப்பாடன் றென்பதற்கு விறகிற்குச் சென்றோர் பொன் பெற்றாற்போல்வதொரு தலைப்பாடதென்று பொருளுரைப்பாரு முளர்; அது பொருந்துமே லறிந்து கொள்க.
விளக்கம்: தீந் தொடை யென்றவிடத்துத் தொடையின் இனிமையைத் தேனாகிய உவமையால் விளக்கினா ரென்றற்குத் தேன்போலும் இனிய தொடை யென வுரைத்தார். வறுமை யுற்றிருக்கும் இரவலன் வளவன்பால் பொருள்பெற்று வரும் பாணனை நோக்கி, பாண, மாக்கிணை இனிய காண்க; இவண் தணிக எனச் சொல்லித் தன் வறுமை நீக்குதற்குரியவர் யாவரென வினவுகின்றான். கயத்துவாழ் யாமை காழ்கோத்தன்ன வென்றது, கிணையின் உருவமைப்பைப் புலப்படுத்துதல் காண்க. தணிதல், பசி தணித்து இளைப்பாறுதல். முது வாய் இரவலன் இரவல னுடைய முதுமையும் சொல்லின் வாய்மையும் தோன்ற நின்றது. மழைக் காலத்து நீர்ப் பெருக்கால் கலக்கமுற்றிருக்கும் நீர், தைத் திங்களில் தெளிந்து தண்ணிதாயிருத்தலால், தைத் திங்கள் தண்கயம் என்றார். பனிச்சுனைத் தெண்ணீர், தைஇத் திங்கள் தண்ணிய (குறுந். 196) என்ப. கூதிராயின் தண்கலிழ் தந்து, வேனி லாயின் மணிநிறங் கொள்ளும், யாறு (ஐங்.45) என்பது ஈண்டுக் குறிக்கத் தக்கது. பகைவர் ஊர்களைச் சுடு நெருப்பு, ஈண்டுச் சுடுநெருப் பெனப் பட்டது. செலவு - செல்வம். ஒய்தல் - செலுத்துதல்; உப்பொய் ஒழுகை (புறம்.116) எனப் பிறரும் கூறுப. தலைப்படுதல் - நேர்படுதல். விறகு விற்போர் ஊருக்குக் கொண்டுசென்று ஆங்கே விற்றுப் பெறும் பொருளை அக் காட்டிடத்தே பெற்றுக்கொள்ள நேரும் வாய்ப்பு; அது போல்வதன்று; போல்வதாயின், அஃது ஐயத்துக் கிடமாம் என்பார்,
|