| சிறந்த; தென்புலம் காக்கும் காவலின் ஒரீஇ - பாண்டி நாடு காக்கும் காவலின் நீங்கி; பிறர் வன் புலங் காவலின் மாறி - பிறருடைய வன்புலங்களைக் காக்கும் காவற்கண்ணே இக் குடிப்பிறப்பின் நீங்கி; யான் பிறக்கு - யான் பிறப்போனாக எ-று.
மெலிகோல் செய்தே னாகுக வென்பதனுள், ஆகுக வென்பது எங்குந் தந்துரைக்கப்பட்டது. ஒன்றோ வென்பது எண்ணின்கண் வருவதோர் இடைச்சொல்; அதனை முன்னும் பின்னும் கூட்டுக.
விளக்கம்: மடங்கா வுள்ளத் தடங்காத் தானை: தொடங்கின் இடையில் மடங்குதல் ஊக்கமுடைய தானை வீரர்க்கு ஆகாமையாலும் தொகை மிகுதியால் அடங்கி நிற்றல் அமையாமையாலும் இவ்வாறு கூறினார். அறன் நிலை திரிய அன்பு; அறத்திற்கே அன்பு சார்பென்ப வாதலால், அறம் நிலைகலங்காமைக்கு அன்பு இன்றியமையாததாயிற்று. கண்ணன் நண்பரொடு கூடிக் களித்தலை விட்டு வேறுபடும் குறிப்பு, கெடுவது காட்டும் குறியாதலால், கேளிரொடு கலந்த இன்களி மகிழ் நகை இழுக்கியான் என்று எடுத்தோதினான். மாறுதல், ஈண்டுப் பிறப்பு மாறுதல்; இம்மை மாறி மறுமை யாயினும் குறுந்.49) என்றாற் போல. பிறக்கு; செய்யென்னும் வாய்பாட்டுத்தன்மை வினைமுற்று. இப் பாட்டின்கண், தென்புலங் காக்கும் பாண்டியர் குடிப்பிறப்பின் உயர்வு குறித்துரைக்கப் படுவது நோக்கத்தக்கது. இவ்வாறே, மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது (சிலப்.20: 76-7) என வருவதும் ஒப்புநோக்கத்தக்கது. 72. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் சிற்றரசரும் பேரரசருமாகிய எழுவருக்கும் தலையாலங்கானம் என்னுமிடத்தே பெரும் போருண்டாயிற்று. அக்காலத்தே இவன் மிக இளையனாயிருந்தான். வேந்தர் தாமும் இவன் இளையன்தான் என இகழ்ந்து நால்வகைப் படையும் நிரம்ப வுடையேமெனத் தருக்கினர்; அதனால் அவர்கள் இவனை இகழ்ந்து கூறுயதும் உண்டு, அச்சொற்களைக் கேட்ட நெடுஞ்செழியற்குச் சினத் தீக்கிளர்ந்தெழுந்தது. உடனே படையைப் பண்ணிப் போருக்கெழும் இச்செழியன் நெடுமொழிகள் சில சொல்லலுற்றான். நல்லிசைப் புலமையும் மாங்குடி மருதனார் முதலிய சான்றோர் கேண்மையு முடையனாதலின் அச்சொற்கள் அழகிய பாட்டாய் வெளி வந்தன. அப்பாட்டே ஈண்டு வந்துள்ள பாட்டு. இக்கண் குடிபழி தூற்றும் கொடுங்கோன்மையும், புலவர் பாடும் புகழ் பெறாமையும், இரவலர்க் கீயாமையும் ஒரு வேந்தனைக் கீழ்மைப் படுத்துவன என்னும் உணர்வு இவன் உள்ளத்தே யூறி நிற்பது காண்மின்.
| நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் இளைய னிவனென வுளையக் கூறிப் படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தாள் |
|