| உரை: ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று - ஒருவனை யொருவன் கொல்லுதலும் ஒருவற்கொருவன் தோற்றலும் புதிதன்று; இவ்வுலகத்து இயற்கை - இந்த உலகத்தின்கண் முன்னே தொட்டு இயல்பு; இன்றின் ஊங்கு கேளலம் - இன்றையின் முன் கேட்டறியோம்; திரள் அரை மன்ற வேம்பின் - திரண்ட தாளையுடைய மன்றத்திடத்து வேம்பினது; மாச்சினை ஒண் தளிர் - பெரிய கொம்பின்கண் உண்டாகிய ஒள்ளிய தளிரை; நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து - நீண்ட கொடியாகிய உழிஞைக் கொடியுடனே விரவி; செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி - செறியத் தொடுக்கப்பட்ட தேன் மிக்க மாலையை; ஒலியல் மாலையொடு பொலியச் சூடி - வளைய மாலையுடனே சிறப்பச் சூடி; பாடின் தெண் கிணை கறங்க - ஓசையினிய தெளிந்த போர்ப்பறை யொலிப்ப; காண்தக - காட்சிதக; நாடு கெழு திருவின் பசும் பூண் செழியன் - நாடு பொருந்திய செல்வத்தினையுடைய பசும் பொன்னாற் செய்த பூணையணிந்த நெடுஞ் செழியனது; பீடும் செம்மலும் அறியார் - பெருமையையும் உயர்ந்த தலைமையையும் அறியாராய்; கூடிப் பொருதும் என்று தன் தலை வந்த - தம்மிற்கூடிப் பொருவேமென்று தன்னிடத்து வந்த; புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க - புனைந்த வீரக் கழலினையுடைய இரு பெரு வேந்தரும் ஐம் பெரு வேளிருமாகிய ஏழரசருடைய நல்ல வென்றி யடங்க; ஒரு தானாகிப் பொருது களத்து அடல் - தான் ஒருவனாய் நின்று பொருது களத்தின்கட் கொல்லுதல் எ-று.
ஒருவனை யொருவன் அடுதலும் தொலைதலும் புதுவ தன்று; இவ்வுலகத் தியற்கை; செழியன் பொருது மென்று வந்த எழுவர் நல்வல மடங்க ஒருவனாகித் தெரியலை மாலையொடு காண்டகச் சூடிக் கிணை கறங்கப் பொருது களத்து அடல் இன்றின் ஊங்கோ கேளலம் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: வேம்பினது, அடிப்பகுதி பருத்துத் திரண்டிருத்தலின், திரளரை யென்றாராக, உரைகாரர், திரண்ட தாள் என்றார். பவர் - கொடி. வேம்பு, அடையாளப் பூ; உழிஞை - போர்த்துறைக்குரிய பூ. ஒலியல் மாலை - வளைய மாலை. செம்மல், செம்மையுடைமை அதனை யுடையார் தலைவராதலின், செம்மல் தலைமை யாயிற்று. புனை கழல் எழுவராவார். சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்ற எழுவர். பசும்பூண் பாண்டிய னென்னாது, செழியன் என்றார். பசும்பூண் பாண்டிய னென்ற பெயரே யுடைய பாண்டி வேந்தனொருவன் உளனாதலின்.
|