| 81. சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி
கோப்பெரு நற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூரின்கண் இருக்கையில் போருண்டாயிற்று. அப் போரில் பகைத்து வந்தோரை யெதிர்த்துப் பொரும் படையில் இக்கிள்ளி யிருந்தான். அப் படைக்குத்தலைமை தாங்கிப் பொரும் இவனது போராண்மையைக் கண்ட சாத்தந்தையார் பெருவியப்புற்று, இப்பாட்டின்கண்ணே இவன் படையின் ஆர்ப்புக் கடலினும் பெரிது; களிறுகள் இடிபோல் முழங்குகின்றன; இந்நிலையில் இவன் கைப்படுவோர் யாவரோ? அவர் பெரிதும் இரங்கத்தக்கார்எனப் பாடிப் பரவுகின்றார்.
திணை: வாகை. துறை: அரசவாகை. அவனை அவர் பாடியது.
| ஆர்ப்பெழு கடலினும் பெரிதவன் களிறே கார்ப்பெய லுருமின் முழங்கலா னாவே யார்கொ லளியர் தாமே யார்நார்ச் செறியத் தொடுத்த கண்ணிக் | 5 | கவிகை மள்ளன் கைப்பட்டோரே. (81) |
உரை: ஆர்ப்பு எழு கடலினும் பெரிது - படையினது ஆரவாரம் எழுகடலும் கூடி யொலிக்கும் ஒளியினும் பெரிது; அவன் களிறு அவனுடைய களிறு; கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனா - கார்காலத்து மழையின்கண் இடியினும் முழங்குதலையமையா; நார் செறியத் தொடுத்த ஆர் கண்ணி - நாரால் பயிலத் தொடுக்கப்பட்ட ஆத்திக் கண்ணியையும்; கவிகை மள்ளன் கைப்பட்டோர் - இடக்கவிந்த கையினையுமுடைய வீரனது கையின் கட் பட்டோராகிய; அளியர் யார்கொல் - இரங்கத்தக்கார் தாம் யார் கொல் எ-று.
விளக்கம்: களிற்றின் முழக்கமும் கிள்ளியின் கைப்படுவோர் ்பால் இரக்கமும் கூறுதலின், ஆர்ப்பு படையினது ஆரவாரமாயிற்று. கார் காலத்து இடி முழக்கம் குமுறு குரலாய் நெடிது நில்லாதென வறிக. கண்ணியும் கவிகையுமுடைய மள்ளன் என்க. சோழற் குடியிற் பிறந்தமையின், ஆத்திக்கண்ணியும், ஈகை அக் குடிப்பிறந்தோர்க் கியல் பாதலின், கவிகையும் கூறினார். கவிகை: வினைத்தொகை. கையகப் பட்டோர் யார்கொல் என மனமிரங்கிக் கூறினார். அவர்தாம் கொலை யுண்டல் ஒருதலை யென்றற்கு. |
|
|
|