| 82. போரவைக் கோப்பெரு நற்கிள்ளி
கோப்பொரு நற்கிள்ளி போரவையில் நிகழ்த்திய மற்போரின் விரைவினைக் கண்ட சாத்தந்தையார் இப்பாட்டின்கண், அவ்விரைவை மட்டில் வியந்து மற்போர்க்கு வந்த மல்லன் தன் வெற்றிப் பயனாக ஆமூரைத் தனக்குரித்தாகக் கொள்ளக் கருதி வந்தான். அவனை இக்கிள்ளி தான் வென்று அவன் எண்ணத்தை மிக விரையில் சிதைத்தான் என்று பாடிப் பாராட்டியுள்ளார்.
| சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக் கட்டி னிணக்கு மிழிசினன் கையது போழ் தூண் டூசியின் விரைந்தன்று மாதோ | 5 | ஊர்கொள வந்த பொருநனொ | | டார்புனை தெரிய னெடுந்தகை போரே. (82) |
திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது. உரை: சாறு தலைக் கொண்டென - ஊரின்கண் விழாத் தொடங்கிற்றாக அவ் விழாவிற்குதவப் போகவும்; பெண்ணீற்று உற்றென - தன் மனைவி பிள்ளை பெறுதலைப் பொருந்தினவளாக அவள் மெய்ந்நோவிற் குதவப்போகவும் வேண்டி; பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று - பெய்கின்ற மழையையுடைய ஞாயிறு வீழ்ந்த போழ்தின்கண்; கட்டில் நிணக்கும் இழிசினன் கையது - கட்டிலைப் பிணிக்கும் புலைமகன் கையதாகிய; போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று - வாரைச் செலுத்தும் ஊசியினும் விரைந்து; ஊர் கொள வந்த பொருநனொடு - ஊரைக் கொள்ளவந்த வீரனோடு; ஆர் புனை தெரியல் நெடுந்தகை போர் - ஆத்தியால் தொடுக்கப் பட்ட கண்ணியையுடைய பெருந்தகையது போர் எ-று.
நெடுந்தகை போர், பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றின்கட் சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்று உற்றென இழிசினன் கையதாகிய ஊசியின் விரைந்தன் றெனக் கூட்டுக. சாறுதலைக் கொண்டென அதற்கு உதவப்போகவும், பெண்ணீற் றுற்றென அதற்குதவப் போகவுமென வேறு வேறு கொள்க; ஒன்றாக வுரைப்பாரு முளர்.
விளக்கம்: ஈற்று - பிள்ளைப் பேறு. விழாவிற்கு உதவுதலும், மனைவி மெய்ந்நோவுக் குதவுதலும் இழிசினனுக்குக் கடமையாதலின், அவன் உள்ளத்தே விரைவு தோன்றுவது ஒருதலையாயிற்று. ஞாயிறு மறைதல் தையல் வேலைக்கு இடையூறாதலின், அஃது அவன் விரைவினை மிகுதிப்படுத்திற்று. மல்லனொடு பொருமிடத்துப் பெருநற்கிள்ளியின் கையும் காலும் விரைதற்கு இழிசினன் கையதாகிய போழ்தூண்டூசி உவமமாயிற்று. ஊர் கொள வந்த வீரன் என்றதனால், மல்லன் போரவைக்கு வந்ததன் நோக்கம் வெளிப்படுவதாயிற்று. |