பக்கம் எண் :

203

              83. போரவைக் கோப்பெருநற்கிள்ளி

    போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆமூர்க்கண், தன் தந்தையை
வெறுத்து    வந்திருந்த     காலத்து    அவன்  கட்டிளமையும்  போர்
வன்மையும்  நல்லழகும்  கண்டு,  அவ்வூர்ப்  பெருங்கோழி நாய்கன்
மகளாகிய    நக்கண்ணையார்    என்பார்  அவன்பால்    காதற்காமம்
கொண்டார்.    அவரொரு  சிறந்த    புலவர்பெருமாட்டியுமாவர்.   இப்
பாட்டின்கண்,    அவர்    கோப்பெருநற்கிள்ளி    பொருட்டுத்  தொடி
நெகிழும்  பசப்புற்றுத்  தம் தாய்க் கஞ்சுவதும், ஊரிலுள்ள சான்றோர்
தம்  காதற்  பெருமை  யறிந்து  மணம்  புணர்த்த நினையாமைக்கும்
வருந்திக் கூறியுள்ளார்.

     பெருங்கோழி  நாய்கன்  என்ற  பெயர்,  இவர் உறையூரிடத்து
வாழ்ந்த  வணிகர்  மரபினர்போலும்  என நினைத்தற் கிடந்தருகிறது.
மாநாய்கன்    என்ற    பெயர்    இளங்கோவடிகளாற்  கூறப்படுவதால்
பெருங்கோழி  நாய்கன்  என்பது  இயற்பெயராதற்கும்  அமையுமென
உணரலாம்.  நக்கண்ணன்    என  வரும்  ஆண்பாற்  பெயர்க்கேற்ப,
நக்கண்ணை  யென்பது  பெண்பாற்  பெயராகும். இவர் பாடியனவாக
அகத்தி  லொன்றும்,  நற்றிணையில்  இரண்டும், புறத்தில் மூன்றுமாக
ஆறு    பாட்டுக்கள்   உள்ளன.    இவர்    சோழன்    போரவைக்
கோப்பெருநற்கிள்ளிபால்      கைக்கிளைக்      காமக்    காதல்கொண்
டொழுகிய திறம் இப் பாட்டுக்களால் அறியலாம்.

 அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென்
தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே
அடுதோண் முயங்க லவைநா ணுவலே
என்போற் பெருவிதுப் புறுக வென்றும்
5ஒருபாற் படாஅ தாகி
 இருபாற் பட்டவிம் மைய லூரே.  (83)

    திணை. கைக்கிளை.   துறை;    பழிச்சுதல். அவனைப்
பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது.

    உரை:  அடி புனை தொடு கழற் மையணற் காளைக்கு -
அடியின்கட்    புனைந்த    வீரக்    கழலினையும்  மைபோன்ற
தாடியினையுமுடைய    இளையோன்  பொருட்டு;  என்  தொடி
கழித்திடுதல்  -  எனது வளை என்னைக் கைவிடுதலான்; யான்
யாய்  அஞ்சுவல்  -  யான்  யாயை அஞ்சுவேன்; அடு தோள்
முயங்கல் - அவன் பகையைக் கொல்லுந் தோளைத் தழுவுதற்கு;
அவை  நாணுவல்  -  அவையின் கண் உள்ளாரை நாணுவேன்;
என்றும்    ஒருபாற்  படாதாகி  -  எந்நாளும்  யாயே  யாதல்
அவையே  யாதல்  ஒரு கூற்றிற் படாதாகி; இருபாற் பட்ட இம்
மையல்  ஊர் - யாயும் அவையுமாகிய இரு கூற்றிற் பட்ட இம்
மயக்கத்தையுடைய    ஊர்;  என்போல்   பெருவிதுப்  புறுக -
என்னைப்போல்    மிக்க    நடுக்க    முறுவதாக   எ-று.

    மையலூர்  பெருவிதுப்புறுக வெனக்கூட்டுக. யாயில்லையாயின்
வளைகழலுதற்  கஞ்சவேண்டா;  அவை  யில்லையாயின் முயங்குதற்
கஞ்ச
   வேண்டா    வென்பது    கருத்தாகக்    கொள்க.