| ஒருபாற் படாதாகி இருபாற்பட்ட இம் மையலூர் என்பதற்கு அச்சமும் நாணுமுண்டாய் வருந்தும் என் கூற்றிலும் நில்லாது என் காதலறிந்து அவனொடு கூட்ட நினையாத யாய் கூற்றிலும் நில்லாது இருவர் கூற்றிலும் நின்று மயங்குகின்ற ஊரெனினும் அமையும்.
விளக்கம்: காதலொழுக்கம் மேற்கொண்ட மகளிர் தம் காதலரைப் பிரியினும் தலைக்கூடப் பெறாவிடினும் பசந்து உடம்பு நனி சுருங்கித் தொடியும் வளையும் கழல வருந்துவராதலின், இங்கே பெருநற்கிள்ளியைத் தலைக்கூடப் பெறாத நக்கண்ணையார், மையணற் காளைக்குத் தொடி கழித்திடுதல் அஞ்சுவல்என்றும், தன்னொழுக்கத்திற்குத் தாய் இடையூறாதலின் யா யஞ்சுவல். என்றும் கூறினார். சான்றோர் கூடிய அவையினர் ஒருத்தியை ஒருவற்குத் திருமணத்தால் கூட்டி வைப்பவராதலின், அவர் தாம் விரும்பியவாறு தாமே சென்று கூடற்கு அவ் வவையினர் இகழ்வர் என்பது பற்றி, அவை நாணுவல் என்றார். தமது மையலை ஊர்மேலேற்றி மையலூர்என்றார். 84. போரவைக் கோப்பெருநற்கிள்ளி பெருநற்கிள்ளியால் காமக் காதல் கொண்டொழுகும் நக்கண்ணையார் அவன் வாழ்ந்த மனையின் சிறைப்புறத்தில் வாழ்ந்து வந்தனர். அவனை யடிக்கடி கண்டும் இருந்தார். அவ்வாறிருந்தும், அவனை மணந்து கோடற்குரிய வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை; ஆயினும் அவன்பால் அவருக்குண்டாகிய காதல் பெருகிவருவதாயிற்று. அந்நிலையில் அவர் மிகவும் வருந்தி, என் தலைவனாகிய கிள்ளி, தன்னாடு நீங்கிப் போந்து ஈண்டு வாழ்வதால் வறியனாய்ப் புற்கையுண்டு வருகின்றானாயினும் தோட் பெருமை குன்றாதவன்; அவனை எளிதிற் காணுமாறு அவன் சிறைப்புறத்தே வாழினும் யான் பசப்புற்றுப் பொன்னிறமே பெறுவேனாயினேன்; அவன் போர்க்களம் புகின் போர் வீரர்க்கு ஏற்றிழிவுடைய துறைபோல வருத்தம் உண்டுபண்ணுகின்றான்; எனவே, அவன் வீரர்க்கும் எனக்கும் ஒப்ப வருத்தத்தைச் செய்கின்றான் காண் என்று இப்பாட்டின்கண் பரிந்து கூறுகின்றார்.
| என்னை, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே யாமே, புறஞ்சிறை யிருந்தும் பொன்னன் னம்மே போரெதிர்ந் தென்னை போர்க்களம் புகினே கல்லென் பேரூர் விழவுடை யாங்கண் | 5 | ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க் | | குமணர் வெரூஉந் துறையன் னன்னே.(84) |
திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
உரை: என்னை - என்னுடைய தலைவன்; புற்கை உண்டும் பெருந்தோளன் - தன் நாடிழந்த வறுமையால் புற்கை நுகர்ந்தானாயினும் பகைவரஞ்சத்தக்க பெரிய தோளையுடையன்; யாம் புறஞ் சிறை யிருந்தும் |