பக்கம் எண் :

205

பொன்னன்னம் - யாம் அவனுடைய சிறைப் புறத்திருந்தும்
பலகாலும் காணப் பெறினும் மெய்யுறப் பெறாமையின் வருந்திப்
பொன்போலும் நிறத்தை யுடையே மாயினேம்; போர் எதிர்ந்து
என்னை போர்க்களம் புகின் - போரை யேற்று என் தலைவன்
போர்க்களத்தின் கட்புகின்; கல்லென் பேரூர் - கல்லென்னும்
ஒலியையுடைய பெரிய வூரின்கண்; விழவுடை ஆங்கண் - போர்
செய்தற்கெடுத்த விழா வினையுடைய அவ்விடத்து; ஏமுற்றுக்
கழிந்த மள்ளர்க்கு - தோள் வலி பேசி இன்பமுற்றுப் போந்த
வீரர்க்கு; உமணர் வெரூஉம் துறை அன்னன் - உப்பு விற்பார்
அஞ்சத்தக்க ஏற்றிழிவுடைய துறையை யொப்பன் எ-று.

     என்னை புற்கை யுண்டும் பகை வெல்லும் பெருந்தோளனாம்; யாம்
அவன் சிறைப்புறத்திருந்தும் பசப்பை வெல்லமாட்டாமையால் பொன்
போன்றன மெனத் தன் வேட்கை மிகுதி கூறியவாறு. அன்றி, இதற்கு,
என்னை புற்கையுண்டும் வழங்கும் பெரிய தோளையுடையனாயும்
நம்மிடத்து அருளின்மையின், அவன் சிறைப்புறத்திருந்தும், பொன்போற்
பசந்தே மென்று அழிந்து கூறியதாகப் பொருளுரைப்பாரு முளர். உணமர்
வெரூஉம் துறையன்னன் என்றதனாற் பயன் வருத்துங் கூற்றில்
ஆடவரையும் மகளிரையும் ஒக்க வருத்துவதல்லது அருளுமாறு கற்றிலனோ
வென்னும் நினைவிற் றாக்குக.

     விளக்கம்: கிள்ளி அரசகுமர னாதலின், அவன் புற்கையுண்டற்குக்
காரணம் காட்டல் வேண்டி; ‘‘நாடிழந்த வறுமையால்’’ என அவன் வரலாறு
காட்டினார். ஆமூர் மல்லனை அட்டு நின்றமையால் அவன் தோள்
பெருமை விளங்கினமை கண்டு, ‘‘பெருந் தோளன்’’ என்றார். பலகாலும்
அவனைக் காணத்தக்க நிலையில் தாம் இருப்பினும், அவனை முயங்கப்
பெறாமையின் கண் பசப்புற்றிருக்குமாறு தோன்றப் ‘‘பொன்னன்னம்’’
என்றும் பெறுதற்கரிய நலம் பசலையால் உண்ணப்பட்டுக் கழிதற்
கிரங்குதலின் ‘‘யாம்’’ என்றும் கூறினார். பசலையால் மகளிர் கண்
பொன்போறல், “பூப்போ லுண்கண் பொன்போர்த் தனவே’’ (ஐங். 16)
என்பதனா லறிக. தம் வலியைத் தாமே வியந்து செருக்கி வந்து பின்பு
அதனை யிழந்த வீரரை, ‘‘ஏமுற்றுக் கழந்த வீரர்’’ என்றார்.


85. போரவைக் கோப்பெரு நற்கிள்ளி

     போரவை கூட்டி மற்போர் விற்போர் முதலிய போர்களைச் செய்து
மேம்படும் இயல்பினனான பெருநற்கிள்ளி, தொடக்கத்தில் ஆமூர்
மல்லனொடு மற்போர் உடற்றிய காலத்தில் நக்கண்ணையார் அவன்
மற்போரில் மல்லனை யட்டுநின்ற காட்சியை நேரிற் கண்டார். அப்போரைக்
காண வந்திருந்த மக்களுள் ஒருசாரார் ‘‘கிள்ளியே வெல்வன்’’ என்ன, ஒரு
சாரார் கிள்ளிக்கு வெற்றியில்லை’’ என்றனர். ‘‘இருதிறத்தார் கூற்றையும்
கேட்ட யான் விரைந்தோடி, ஆங்கு நின்ற பனைமரத்தின் அடியில்
அதனைப் பொருந்தி நின்று மற்போரைக் கண்டேன்; அதன்கண்
கிள்ளியாகிய என் தலைவனே வென்றி யெய்தினான்’’ என்று இப்
பாட்டால் நக்கண்ணையார் கூறுகின்றார்.