பக்கம் எண் :

206

 என்னைக் கூரிஃ தன்மை யானும்
என்னைக்கு நாடிஃ தன்மை யானும்
ஆடா டென்ப வொருசா ரோரே
ஆடன் றென்ப வொருசா ரோரே
5நல்ல பல்லோ ரிருநன் மொழியே
 அஞ்சிலம் பொலிப்ப வோடி யெம்மில்
முழாவரைப் போந்தை பொருந்திநின்
றியான்கண் டனனவ னாடா குதலே.  (85)

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

     உரை:  என்னைக்கு  ஊர்  இஃது  அன்மையானும்
- என்னுடைய தலைவனுக்கு ஊர் இஃதல்லாமையானும்; என்னைக்கு
நாடு  இஃது  அன்மையானும்  - என்னுடைய தலைவனுக்கு நாடு
இஃதல்லாமையானும்;  ஆடு - அவனுக்கு இயல்பாய வென்றியை;
ஆடென்ப ஒரு சாரோர் - அவனது வென்றி யென்று சிறப்பாகச்
சொல்லுவர்   ஒரு   பக்கத்தார்; ஆடன்று என்ப ஒரு சாரோர் -
அவனது  வென்றி  யன்றென்று  சொல்லுவர் ஒரு பக்கத்தார்;
பல்லோர்  இரு  நன்மொழி  நல்ல - பலரும் ஒத்து பக்கத்தார்;
பல்லோர்  இரு  நன்மொழி  நல்ல - பலரும் ஒத்து ஒவ்வாமற்
கூறும்  இவ்  விருவகைப்பட்ட  நல்லவார்த்தையும்
நல்லவாயிருந்தன;  அஞ்  சிலம்பு  ஒலிப்ப  ஓடி -
அவ்வாறு கூறினாராயினும் அழகிய சிலம் பார்ப்ப ஓடிச் சென்று;
எம்இல் - எம்முடைய  மனையின்கண்; முழா வரைப் போந்தை
பொருந்தி நின்று - முழாப்போலும் பக்கத்தையுடைய பனையைப்
பொருந்திநின்று;   அவன் ஆடாகுதல் யான் கண்டனன் - எனது
வளையும் கலையு முதலானவை தோற்கும் ஆண்மை யுடைமையின்
அவனது வென்றியாதல் யான் கண்டேன் எ-று.


     பின்னும் ஒருகால் என்னை யென்றதனால், இவரது ஆதரவு தோற்றி
நின்றது. நல்ல வென்றது இகழ்ச்சிக் குறிப்பு. ஆடென்றதூஉம்
ஆடன்றென்றதூஉம் அவனைச் சுட்டியே கூறினமையின், இரு நன்மொழியும்
நல்லவென்றா ரெனினு மமையும்.

     யாதேனும் ஒன்றைச் சார்ந்து நின்று காண்டல் நாணுடைய
குல மகளிர்க் கியல்பாதலின், “போந்தை பொருந்தி நின்று யான்
கண்டனன்” என்றார்.  வரும்  பாட்டிலும், “சிற்றில் நற்றூண் பற்றி
நின்று”ஒருத்தி வினவுதல் காண்க.

     விளக்கம்: பெருநற்கிள்ளி போர் உடற்றிநிற்குங்கால் அவனுக்கு
வென்றி யென்று சிலர் சொல்லுதற்குரிய காரணம் இது வென்பார்,
“என்னைக் கூரிஃதன்மையானும்,  என்னைக்கு நாடு இஃது அன்மையானும்”
என்றார், “ஆடன்”றெனப் பிறர் கூறுவது இவர்க்கு இன்னாதாய்த்
தோன்றலின், இவ்வாறு காரணங் காட்டினார்.