அவற்கு வென்றி யுண்டாதலை யான் கண்டனன்என்றமையின், அதற்குக் காரணம் வளையும் கலையும் தோற்றோடத் தாம் நின்றமை யென வருவித்துரைத்தார். இருதிறத்தார் மொழியும் கிள்ளியைச் சுட்டி அவன் நினைவையே யெழுப்பினமையின், இருநன் மொழியும் நல்லவென்றார். 86. காவற் பெண்டு
காவற் பெண்டென்பவர் சிறந்த மறக்குடியில் பிறந்து வளர்ந்து மறக்குடியில் வாழ்க்கைப் பட்டவர்; இனிய செய்யுள் செய்யும் சிறப்புடையவர். இவருக்கு மறம் மிக்க மகனொருவன் இருந்தான். ஒரு சால்புடைய மகள் அவர் மனைக்கு ஒரு நாள் போந்து, அன்னே, நின் மகன் யாண்டுளன்?என வினவினள். அக்காலை, அவர் அவன் போர்க்களத்தே விளங்கித் தோன்றுவன்; அவற்கும் எனக்கும் உள்ள தொடர்பு புலிக்கும் அதன் முழைக்குமுள்ள தொடர்பாகும். அவனை ஈன்ற வயிறோ இது வெனத் தம் வயிற்றைக் காட்டி யுரைத்தார். அவ்வுரையே இப் பாட்டு.
| சிற்றி னற்றூண் பற்றி நின்மகன் யாண்டுள னோவென வினவுதி யென்மகன் யாண்டுள னாயினு மறியே னோரும் புலிசேர்ந்து போகிய கல்லளை போல | 5 | ஈன்ற வயிறோ விதுவே | | தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே. (86) |
திணை: வாகை. துறை: ஏறாண் முல்லை. காவல்பெண்டின் பாட்டு. இவர்பெயர் காதற்பெண்டென்றும் சில ஏடுகளில் காணப்படுகிறது செவிலித்தாயைக் காவற்பெண் டென்பதும் வழக்கு. ஈண்டஃது இயற்பெயராய் வந்தது:
உரை: சிற்றில் நற்றூண்பற்றி - சிறிய இல்லின்கண் நல்ல தூணைப் பற்றி நின்று; நின் மகன் யாண்டுளனோ வென வினவுதி - நின் மகன் எவ்விடத் துளனோ வென்று கேட்பை; என் மகன் யாண்டுளனாயினும் அறியேன் - என்னுடைய மகன் எவ்விடத்துளனாயினும் அறியேன்; புலி சேர்ந்து போகிய கல்லளை போல - புலி கிடந்து போன கன் முழை போல; ஈன்ற வயிறோ இது - அவனைப் பெற்ற வயிறோ இஃது; போர்க்களத்தான் தோன்றுவன் - அவன் செருக்களத்தின் கண்ணே தோன்றுவன், அவனைக் காணவேண்டின் ஆண்டுச் சென்று காண் எ-று.
ஈன்ற வயிறோ இது என்ற கருத்து; புலி சேர்ந்து போகிய அளைபோல அவனுக் கென்னிடத்து உறவும் அத்தன்மைத் தென்பதாம். ஒரு மென்பதூஉம் மாதோ வென்பதூஉம் அசைச்சொல். |