| விளக்கம்: சிற்றில்லின்கண் கூரையைத் தாங்கி நிற்பதுபற்றி, தூணை நற்றூண் என்றார். என் மகன் போர்க்களத்திற்றான் விளக்க முறத்தோன்றுவன் என்பார், தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே என்றார். யாண்டுள ாயினும் அறியேன் என்றார், பிற விடங்களிலிருப்பின் அறியாமைக்கும் போர்க்களத் திருப்பின் அறிதற்கும் இயைபு வற்புறுத்தற்கு. அவன்பால் தமக்குள்ள தொடர்பை ஈன்ற வயிறோ இதுவேஎன்றார்.
87. அதியமான் நெடுமான் அஞ்சி
அதியர் என்பார் குடியிற் பிறந்து சிறந்தமைபற்றி நெடுமான் அஞ்சியை அதியமான் நெடுமான் அஞ்சியென்று சான்றோர் கூறியுள்ளனர். அதியமான் என்பது அதிகைமான் என்றும் சில ஏடுகளிற் காணப்படுவது பற்றி, அதியர் என்பது அதிகையர் என்பதன் திரிபு என்றும், ஒரு காலத்தில் இவர் அதிகை யென்னும் ஊரில் வாழ்ந்திருந்து பின்னர்ச் சேரநாட்டிற் குடியேறி யிருத்தல் வேண்டும் என்றும், இதனால் திகையராகிய இவர் அதியர் எனப்படுவாராயின ரென்றும் அறிஞர் கருதுகின்றனர். நெடுமான் அஞ்சி யென்பது இவன் பெயர். இவன் ஒரு குறுநில மன்னன்; இவனது தலைநகர் இக்காலத்தில் தருமபுரி யெனப்படும் தகடூராகும். இவன் சேரர்கட்குரியனாய் அவர்க்குரிய கண்ணியும் தாரும் தனக்குரியவாகக் கொண்டவன். மழவர் என்னும் ஒருசார் கூட்டத்தார்க்கும் இவன் தலைவன். இதனால் இவனை மழவர் பெரு மகன் என்றும் சான்றோர் கூறுப. இவனது ஆட்சியெல்லை நடு நாட்டுக் கோவலூரையும் தன்னகத்தே கொண்டிருந்தது. குதிரை மலை இவன் நாட்டின்கண்ணதாகும். முதன் முதலாகத் தமிழகத்திற் கரும்பினை வேற்று நாடுகளினின்றும் கொணர்ந்தவர் இவனுடைய முன்னோராவர். பழம் புலவர்கள் இச் செய்தியை, அதியமான் முன்னோர் விண்ணவரை வழிப்பட்டுக் கரும்பினை இவண் கொணர்ந்தன ரென்றும், அவ்விண்ணவர் போந்து தங்குதற் பொருட்டு இவன தூர்க்கணொரு சோலையிருந்த தென்றும் கூறுவர். இவன் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனியொன்றைப் பெற்றான். அக் கனி தன்னை யுண்டாரை நெடிது நாள் வாழச் செய்யும் வலியுடையது. அதனைப் பெற்ற இவன் தானே யுண்டொழியாது நல்லிசைப் புலமை சான்ற ஒளவையார்க் கீந்து அழியா அறப்புகழ் பெற்றான். இவனுக்கு ஒளவையார்பால் பெரு மதிப்பும் பேரன்பும் உண்டு. ஒருகால் தன்னோடு மாறுபட்ட தொண்டைமானிடைச் சந்து செய்வித்தற்கு ஒளவையாரைத் தூது விடுத்தான். இறுதியில் இவன் சேரமான் பெருஞ்சேர லிரும்பொறையுடன் போர் உடற்றி உயிர் துறந்தான். சேரமான் தகடூரை முற்றுகையிட்டிருந்த போது இவன் தன் பொருள் படை துணை முதலியன வலி குறைந் திருப்பதுணர்ந்து தன் அரணகத்தே அடைபட்டுக் கிடந்ததும் பின்னர்ப் போருடற்றி, உயிர் துறந்தும், தகடூர் யாத்திரை யென்னும் நூற்கண் விளங்கும். அந்நூல் இப்போது கிடைத்திலது; சிற்சில பாட்டுகளே காணப்படுகின்றன. இவனைப் பாராட்டி ஒளவையார் பாடியுள்ள பாட்டுகள் பலவாகும். இந்த அதியமான் நெடுமான் அஞ்சிக்கு அத்தை மகள் ஒருத்தியுண்டு. அவளும் சிறந்த பாவன்மை யுடையவள். |
|
|
|