பக்கம் எண் :

211

 

அம் பகட்டு மார்பின் - அழகியவலிய மார்பினையும்; விழவு  
மேம்பட்ட   நற்போர் முழவுத் தோள் - கள வேள்வி முதலாகிய
விழாச் சிறந்த நல்ல போரைச் செய்யும் முழாப்போலும்
தோளினையுடைய; என் ஐயைக் காணா வூங்கு - என் இறைவனைக்
காண்பதற்கு முன், கண்டால் அது செய்தல் அரிதாகலான் எ-று.

         என்னையைக் காணா வூங்கு யாவிராயினும் பொருது மென்றல்
ஓம்புமின் எனக் கூட்டுக.

         விளக்கம்: அறிவு ஆண்மை பொருள் படை முதலியவற்றால்
மிகச் சிறந்திருக்கின்றீராயினும்   என்பதற்கு, “யாவிராயினும்”என்றார்;
முடிவேந்தராயினும் குறுநில மன்னராயினும், ஒருவராயினும் பலராயினும்
அடங்க   இவ்வாறு  கூறினா    ரெனினு   மமையும். கூழை, பக்கத்துப்
பின்னரும் அணிவகுத்து வரும் படை. தார் - தூசிப்படை. பாடம்செய்த
வேலும் வாளும் கூர்மையும் ஒளியுமுடைய வாதலால், “ஒளிறிலங்கு வாள்”
என்றார்.   பாடஞ்  செய்தலாவது  கூர்மை மிகத் தீட்டி அது துருவேறி
மழுங்காவாறு நெய்யணிந்து தோலுறையுள் வைத்தல். பகடு, ஈண்டு
வலிமை குறித்து நின்றது. விழவு மேம்பட்ட போர் என்றதனால், விழவு,
கள வேள்வி முதலாயின குறிப்பதாயிற்று. கண்டவழித் தம் கூழையும்
தாரும் போர்க்கு ஆற்றா வெனவுணர்ந்து அஞ்சி நீங்குவர் என்பது
கருத்து.

 89. அதியமான் நெடுமான் அஞ்சி

         ஒருகால், அதியமானுடைய பகைவருள் ஒருவன் ஒளவையாரைக்
கண்டு, “நுங்கள் நாட்டில் சிறந்த போரைச் செய்வோர் உளரோ?”என
வினவினன். இரப்போர்க் கீயும் இசைநலமுடையோரைப் பாடிப் பரிசில்
பெறும் பாண்மகள் போலச் செல்லும் ஒளவையார், அது கேட்டுச் சிறிதும்
மனமஞ்சாராய்ப்   பெருமிதத்துடன்,   “எங்கள்  நாட்டில்  எறியும்
கோலுக்கஞ்சாது அதனை ஓச்சுந்தோறும் உடன்றெழும் பாம்பு போலச்
சீறி யெழும் வீரர் பலர் உளர், அன்றியும்; மன்றின்கண் கட்டப்பட்டிருக்கும்
போர்ப்பறை காற்றாலசைந்து இசைக்குமாயின், ‘போர் வந்து விட்டது
போலும்’ என்று பொருக்கென எழும் தலைவனும் உளன் காண்”என்று
இப்பாட்டாற் கூறுகின்றார்.

 இழையணிப் பொலிந்த வேந்துகோட் டல்குல்
மடவர லுண்கண் வாணுதல் விறலி
பொருநரு முளரோநும் மகன்றலை நாட்டென
வினவ லானாப் பொருபடை வேந்தே
5 எறிகோ லஞ்சா வரவி னன்ன
 சிறுவன் மள்ளரு முளரே யதாஅன்று
பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
அதுபோ ரென்னு மென்னையு முளனே.  
(89)

         திணையும் துறையும் அவை. அவனை அவர் பாடியது.