பக்கம் எண் :

212

 

        உரை:  இழை யணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்
- மணிக்  கோவையாகிய  அணியாற்   பொலிந்த  ஏந்திய
பக்கத்தினையுடைய அல்குலினையும்; மடவரல் - மடப்பத்தினையும்;
உண்கண் - மையுண்ட கண்ணினையும்; வாள் நுதல் விறலி - ஒளி
தங்கிய    நுதலினையுமுடைய விறலி; பொருநரும் உளரோ நும்
அகன்றலை  நாட்டென - என்னொடு  பொருவாரு  முளரோ
நும்முடைய பெரிய இடத்தினையுடைய நாட்டின்கண் என; வினவல்
ஆனாப் பொரு படை வேந்தே - என்னைக் கேட்ட லமையாத
செருச் செய்யுந் தானையையுடைய வேந்தே; எறி கோல் அஞ்சா
அரவின் அன்ன சிறு வன் மள்ளரும் உளர் - நீ போர் செய்யக்
கருதுவை யாயின் எம்முடைய நாட்டின்  கண்ணே   அடிக்கும்
கோலுக்கு அஞ்சாது எதிர் மண்டும் பாம்பு போன்ற இளைய வலிய
வீரரும் உளர்; அதா அன்று - அதுவே யன்றி; பொதுவில் தூங்கும்
விசியுறு தண்ணுமை - மன்றின்கண் தூங்கும் பிணிப்புற்ற முழவினது;
வளி பொரு தெண்கண் கேட்பின் - காற்றெறிந்த தெளிந்த
ஓசையையுடைய கண்ணின்கண் ஒலியைக் கேட்பின்; அது போர்
என்னும் என்னையும் உளன் - அது போர்ப்பறை யென்று மகிழும்
என்னுடைய  தலைவனும்  உளன்  எ-று.

         தெண்கண் என்றது அதன்கண் ஓசையை. போரென்றது போர்ப்
பறையை.

         விளக்கம: மணிக் கோவை, மணிமேகலை. கோடு, பக்கம்.
மடவரல் - மடப்பம்; “மடவரல் அரிவை”(குறுந். 321) என்றாற்போல.
பொரு படை - போரைச் செய்யும் படை; அஃது ஈண்டுத் தானைமேல்
நின்றது. தெண்கண் என்பது ஆகுபெயராய் ஒலியைக் குறித்தது. யானையின்
மணியோசையைச் சேய்மையிற் கேட்போன் இஃது யானை என்பது போல,
முழவோசை காற்றால் உண்டாகக் கேட்பின், “அது போர்”என்பன
என்றவாறாம்.

                 90. அதியமான் நெடுமான் அஞ்சி

         ஒருகால், அதியமான் தன்னைப் பகைத்துப் பொரக் கருதும்
வேந்தருடன் போர்செய்தற்குச் சமைந்திருந்தான் அடிக்கடி நிகழும்
போர்களால் வீரர் பலர் இறப்பதும், பொருட்கேடுண்டாவதும் அவன்
நினைவிற் றோன்றி அசைவினைப் பிறப்பித்தன. போரைச் செய்யாது
நிறுத்தின் வரும் கேடும் அவன் அறிவுக்குப் புலனாகா தொழியவில்லை.
அந்நிலையில் அதனை யுணர்ந்த ஒளவையார் அதியமானைப் போர்
செய்தற்கு ஊக்கவேண்டிய கடமை யுடையவரானார். இப் பாட்டால், “புலி
சினந்தால் மான் கூட்டம் எதிர் நில்லா; ஞாயிறு சினந்தால் இருள் நில்லாது;
பெருமிதப் பகட்டுக்கு வழியருமை கிடையாது; அவ்வாறே நீ களம் புகின்
போர் செய்வார் இல்லை”யென்று கூறி யூக்கியுள்ளார்.