பக்கம் எண் :

213

 
 உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடைமல்கு குளவியொடு கமழுஞ் சாரல்
மறப்புலி யுடலின் மான்கண் முளவோ
மருளின விசும்பின் மாதிரத் தீண்டிய
5இருளு முண்டோ ஞாயிறு சினவின்
 அச்சொடு தாக்கிப் பாருற் றியங்கிய
பண்டச் சாகாட் டாழ்ச்சி சொலிய
அரிமணன் ஞெமரக் கற்பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ
10எழுமரங் கடுக்குந் தாடோய் தடக்கை
 வழுவில் வன்கை மழவர் பெரும
இருநில மண்கொண்டு சிலைக்கும்
பொருநரு முளரோ நீகளம் புகினே.
 (90)

         திணையும் துறையும் அவை. அவனை அவர் பாடியது.

         உரை: உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் - முரிந்த
வளையையொப்ப மலர்ந்த வெண் காந்தட் பூ; அடை மல்கு
குளவியொடு. கமழும் சாரல் - இலை தழைத்த குளவியுடனே
நாறும் மலைச்சாரற்கண்; மறப் புலி உடலின் மான் கணம்
உளவோ- மறத்தையுடைய புலி சீறின் எதிர்நிற்கவல்ல மானினமும்
உளவோ;    மருளின  விசும்பின்  மாதிரத்து - மயங்கிய
ஆகாயத்திடத்தும் திசையின்கண்ணும்; இருளும் உண்டோ ஞாயிறு
சினவின் - இருளுமுண்டோ ஞாயிறு கொதித் தெழுமாயின்; பார்
அச்சொடு தாக்கிய - பாரத்து மிகுதியால் பார் அச்சுமரத்தோடு
வந்து தாக்கி; உற்று - உற இருத்தலின் இயங்கிய பண்டச் சாகாட்டு
ஆழ்ச்சி சொலிய - நிலத்தின்கட் குளித்த பண்டத்தையுடைய
சகடத்தினது ஆழ்ச்சியைப் போக்குவதற்கு; அரி மணல் ஞெமர -
புனல் கொழிக்கப்பட்ட மணல் பரக்கவும்; கற்பக - கல் பிளக்கவும்;
நடக்கும் - நடக்கவல்ல; பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ
- மிக்க மனச்செருக்கினையுடைய கடாவிற்குப் போதற்கரிய
துறையுமுண்டோ, இல்லையன்றே அவை போல; எழு மரம் கடுக்கும்
தாள் தோய் தடக்கை - கணைய மரத்தையொக்கும் முழந்தாளிலே
பொருந்திய பெரிய கையாகிய; வழுவில் வன் கை - தப்பாத
வன்மையைச் செய்யும் கையினையுடைய; மழவர் பெரும - வீரர்க்குத்
தலைவ; இரு நிலம் மண்கொண்டு சிலைக்கும் - பெரிய நிலத்தின்கண்
நினது மண்ணைக் கொண்டு ஆர்க்கும்; பொருநரும் உளரோ -
வீரரும் உளரோ இல்லையன்றே; நீ களம் புகின் - நீ
போர்க்களத்திற் புகின் எ-று.