பக்கம் எண் :

217

  புதல்வர் தம் மழலை தந்தையர்க்கு அருளுதல் வந்தன்
பிள்ளைகளுடைய  இளஞ்சொல்; என்  வாய்ச் சொல்லும் அன்ன
என்னுடைய வாயின்கட் சொல்லும் அத்தன்மையன; ஒன்னார் கடி
மதில்  அரண்  பல  கடந்த  நெடுமான்  அஞ்சி - பகைவரது
காவலையுடைத்தாகிய மதிலையுடைய அரண் பலவற்றையும் வென்ற
நெடுமானஞ்சி; நீ அருளன் மாறு - நீ அருளுதலால் எ-று.

         
புதல்வர் மழலை தந்தையர்க்கு அருள் வந்தன; அஞ்சி, நீ
அருளுதலால் என் வாய்ச்சொல்லும் அன்னவெனக் கூட்டுக.
யாழென்றது, யாழிற் பிறந்த ஓசையை. பொருளும் என்னும் உம்மை,
விகாரத்தால் தொக்கது.

         விளக்கம்:
இளம் புதல்வர் வழங்குஞ் சொல்லோசையில்
யாழினது இனிய ஓசை காணப்படாதாயினும், அவர்கள் சொல்வழிப் பிறக்கும்
இன்பத்திற்கு யாழிசையின் இன்பம் நிகராகாது தாழ்வுபடும்; பெருந் துன்பம்
போந்து வருத்துகின்றபோதும் தந்தையர்க்குப் புதல்வர் போந்து வழங்கும்
சொல் நிரம்பாமையின் குறிக்கும் பொருள் விளங்காதாயினும், தந்தையர்
அச்சொல்லைக் கேட்டற்குப் பெரிதும் விரும்புவர். மழலை - இளஞ் சொல்;
எழுத்து வடிவு பெறாது தோற்றும் இளஞ்சொல் லென்றும் கூறுவர். புதல்வர்
மொழியும் மழலை பொருணலமும் இடச்சிறப்புமுடைய வல்லவாயினும்
தந்தையரால் அருள்சுரந்து கேட்கப்படுதல் போல என் வாய்ச் சொல்லையும்
நீ அருள்சுரந்து கேட்கின்றாய்; நின் அருள் இருந்தவாறென்னே என்பதாம்.
என் சொல்லென் றொழியாது வாய்ச்சொல் லென்றது, தமது பணிவு தோன்றி
நின்றது. “கடிமதில் அரண்பல கடந்த நீ”யென்றது அவனது போரடு
திருவும் அதற்கேற்ப வேண்டும் மற மிகுதியும் உணர்த்திற்று. இன்ன
செய்கையையுடைய நீ என்பால் அருள் மிகச் சுரந்தொழுகுவது என்னை நின்
மக்களுள் வைத்துப் பேணுகின்ற அன்பு மிகுதியைக் காட்டுகின்ற
தென்றவாறாயிற்று.

                   93. அதியமான் நெடுமான் அஞ்சி

         அதியமான் பகைவர் எதிர்ந்த போர்க்களத்தில், அப்பகைவர்
பலரையும் வென்று வெற்றி மேம்பட்டான்; ஆயினும் அவனுடைய
முகத்தினும் மார்பினும் பகைவர் எறிந்த படையால் புண்கள் உண்டாயின.
போர் முடிவில் வாகை சூடி வென்றி பெற்று நிற்கும் அவனுடைய
புண்களைக் கண்ட ஒளவையார்க்குப் பெருமகிழ்ச்சி யுண்டாயிற்று. அதனால்
அவர் தம் மகிழ்ச்சியை இப்பாட்டால் புலப்படுத்தினார். இதன் கண்,
“பெருந்தகையே, நீ விழுப்புண் பட்டு ஓய்வு பெறுதலால், நின்னொடு
பொருது உடைந்தோடி இழிவுற்ற பகை வேந்தர் நின் வாளால்,
சிதைந்தழிந்தமையின், நினக்குத் தோற்றார் என்ற பழியும், சுற்றத்தாற் கூடி
வாளாற் போழ்ந்தடக்கும் சிறுமையும் இல்லாதபடி பட்டொழிந்தனர்; இனி
நின்னைப் போரில் எதிர்ப்பார் இல்லை; ஆகவே நீ இனி முரசு முழங்கச்
சென்றாற்றும் போர் எங்கே யுண்டாகப் போகிறது”என்ற கருத்துப் படப்
படியுள்ளார்.