| வந்தோர், மன்னரை வாள்போழ்ந் தடக்கும் அவ் விழிதகவும் பெறாது உய்ந்தனராதலின், இனி நீ முரசம் முழங்கச் சென்று அமர் கடத்தல் யாவதுஎன்பதாம். தூசிப்படை, மருங்கிலும் பின்னும் அணிவகுத்து வரும் கூழைப் படையினும் வலிகுறைந்த தாதலால், தார் தாங்கலுமென்ற உம்மை இழிவு சிறப்பாயிற்று.
94. அதியமான் நெடுமான் அஞ்சி
திருவோலக்கத்தின்கண் அரசர் சூழ விருப்பினும் போர்க்களத்தே படை நடுவண் இருப்பினும், ஒளவையார்க்கும் அவரொத்த, புலவர்க்கும், அதியமான் இன்முகமும் இன்சொல்லும் உடையவனாய் இருந்துவந்தான். அவனது அவ்வொழுகலாறு மிக்க மகிழ்ச்சி தந்தமையின் அதனை யவர் இப்பாட்டின்கண், பெரும நீ எமக்கு இனியையாய் ஒன்னாதார்க்கு இன்னா செய்பவனாய் உள்ளாய் என்று சிறப்பித்துள்ளார்.
| ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின் நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை பெரும வெமக்கே மற்றதன் துன்னருங் கடாஅம் போல | 5 | இன்னாய் பெருமநின் னொன்னா தோர்க்கே. (94) |
திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
உரை: ஊர்க்குறு மாக்கள் - ஊரின்கட் சிறுபிள்ளைகள்; வெண் கோடு கழாஅலின் நீர்த் துறை படியும் - தனது வெள்ளிய கோட்டைக் கழுவுதல் காரணமாக நீரையுடைய துறைக்கட் படியும்; பெருங் களிறு போல - பெரிய களிறு அவர்க்கு எவ்வாறு எளிதாய் இனிதாம் அவ்வாறே; எமக்கு பெரும இனியை - எங்களுக்குப் பெருமநீ இனியை; மற்று அதன் துன்னரும் கடாஅம் போல - மற்றதனுடையஅணைதற்கரிய மதம்பட்ட நிலைமை எவ்வாறு இன்னாதாம் அதுபோல; பெரும நின் ஒன்னாதோர்க்கு இன்னாய் - பெரும நின் பகைவர்க்கு இன்னாய் எ-று.
கழாஅலின் என்பதற்குக் கழுவப்படுதலா லெனினு மமையும்.
விளக்கம்: மன வுணர்வு நிரம்பாமையின், இளஞ் சிறுவர்களைக் குறுமாக்கள்என்றார்; மடக்குறு மாக்களோ டோரையயரும், அடக்கமில் போழ்து(கலி.82) என்றாற்போல. மதம் பட்ட யானை பாகர்க் கடங்காது மறலு மாதலால், அதுபற்றித் துன்னரும் கடாஅத்து நிலைமை யென்றார். பெருமைக்கும் வலிக்கும் களிறு உவமமாயிற்று. கடா அம்: ஈண்டு ஆகுபெயராய்க் கடாம் உண்டாகிய நிலைமை குறித்து நின்றது. கழாலின் என்றதற்குக் கழுவுதல் காரணமாக என்று கூறாமல், கழுவப்படுதலால் என்று பொருள் கூறினும் பொருந்தும் என்பதாம். பெரும என இருமுறை கூறியது அவரது காதன்மை யுணர்த்தி நின்றது. |
|
|
|