| கைமான் கொள்ளு மோவென உறையுண் முனியுமவன் செல்லு மூரே. (96) |
திணை: அது. துறை: இயன்மொழி. அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.
உரை: அலர் பூந் தும்பை அம் பகட்டு மார்பின் - மலர்ந்த பூவையுடைய தும்பைக் கண்ணியை யணிந்த அழகிய வலிய மார்பினையும்; திரண்டு நீடு தடக்கை என்னை இளையோற்கு - திரண்டு நீண்ட பெரிய கையினையுமுடைய என் இறைவன் மகன் இளையோனுக்கு; பகை இரண்டெழுந்தன - பகை இரண்டு தோன்றின; பூப்போல் உண்கண் பசந்து - அவற்றுள் பூப் போலும் வடிவினையுடைய மையுண்ட கண்கள் பசப்ப; தோள் நுணுகி - தோள் மெலிய; நோக்கிய மகளிர் பிணித் தன்று - தன்னைப் பார்த்த மகளிரை நெஞ்சு பிணித்ததனால் அவர் துனி கூருதலின் உள்ளதாயது; ஒன்று - ஒரு பகை; அவன் செல்லும் ஊர்- அவன் எடுத்துவிட்டுச் சென்றிருக்கும் ஊர்; விழவின் றாயினும் -விழா இல்லையாயினும்; படுபதம் பிழையாது - உண்டாக்கப்படும் உணவு யாவர்க்கும் தப்பாமல்; மையூன் மொசித்த ஒக்கலொடு - செம்மறி யாட்டுத் தசையைத் தின்ற சுற்றத்துடனே; துறைநீர் - யாறுங் குளனு முதலாகியவற்றின் துறை நீரை; கை மான் கொள்ளும் என - அவன் யானை முகந் துண்ணு மெனக் கருதி; உறையுள் முனியும் - அவ்விடத்து உறைதலை வெறுக்கும்; ஒன்று - அவ்வெறுத்ததனா லுளதாயது ஒரு பகை ஆகப் பகை இரண்டு எ-று.
பசந்து நுணுகி யென்னும் செய்தெனெச்சங்களைச் செயவெனெச்ச மாக்கி அவற்றைப் பிணித்தன்றென்னும் வினையோடு முடிக்க. ஓகாரம் அசைநிலை. இதனால் அவன் இன்பச் சிறப்பும் வென்றிச் சிறப்பும் கூறியவாறு.
விளக்கம்: அகன்ற மார்பும் திரண்ட தோளும் நீண்ட கையும் ஆண்மக்கட்குச் சிறந்தனவாதலால், அம்பகட்டு மார்பின் திரண்டு நீடு தடக்கை யென்றார். பசந் தென்பது பசப்ப வெனத் திரிக்கப்பட்டது. பிணித்தலால் உளதாகும் பயன் துனி கூர்தலாதலால், பிணித்தன் றென்பதற்கு, பிணித்ததனால்....உள்ளதாயது என்றார். படையெடுத்துச் சென்று முற்றுதலை, எடுத்துவிட்டுச் சென்றிருக்கும்என்றார். மொசித்தல் - உண்டல். கைம்மான் என வரற்பாலது எதுகை நோக்கிக் கைமான் என வந்தது. கைம்மான், கைம்மா வெனவும் வரும்; இது யானைக்குரியது. இளமைச் செவ்வியும் மெய் வன்மையும் உடையனாதலின், இவற்றால் இன்பச் சிறப்பையும் வென்றிச் சிறப்பையும் பகையாகக் கூறியது இன்ப மிகுதி கழிகாமமாய்ப் பகைவர்க் கெளிமையும், மற்றதன் மிகுதி குடியஞ்சும் கோலுடைமையுமாய்த் தீது பயக்குமென்றற்கு. இவன்பால் இன்பச் சிறப்பும் வென்றிச் சிறப்பும் விளங்குவவாயின.
|