| விளக்கம்: காவடியின் ஒருபுறம் பதலையும் ஒருபுறம் சிறுமுழாவும் சம எடைபடத் தொங்கவிட்டாலன்றிக் காவிச் செல்ல முடியாதாகலின், தூங்கத் தூக்கியென்றார். பகைப்புலத்தே இருக்குமாறு வற்புறுத்தற்குச் சேணோ னல்லன்என முன் மொழிந்தார். பொழுது இடைப் படாமையால் புலராத மண்டையைப் பொழுதிடைப் படாஅப் புலரா மண்டையென்றார். பெருப்ப என்புழிப் பெருத்தல் மிகுதல். அடிசிறுத்து முகம் அகன்றிருப்பது பற்றி, நாட்டுப்புறங்களில் வாழும் மகளிர் ஒருவரோ டொருவர் உறுப்பு நலம் பழித்து வைதுரைக்குமிடத்துப் பதலை மூஞ்சி யென்று கூறுவர். இதனால், ஒருதலை முகமுடைய தோற்கருவியாகிய இதன் முகத்தியல்பு அறியப்படும். பகைப்புலத்தோன்பால் ஆற்றுப்படுத்துவது, அப்பகைப் புலத்தே திறையாகப் பெறப்படும் அனைத்தையும் நல்குவன் என்பது குறித்து நிற்றலின், பகைப் புலத்தோன்......என்பதாம்என்றார். அலத்தற் காலையாயினும்,என்புழி உம்மை புரத்தலின் அருமையை மிகுதிப்படுத்தி நிற்றலின், உம்மை சிறப்புஎன்றார். நீட்டித்தலை எவ்வழியும் அறியாதானைப் பரிசில் நீட்டிப்பானல்லன்என்பது சிறப்பன்மையான், நீட்டிப்பானல்ல னென்றுரைப்பினு மமையுமென்றொழிந்தார். அலத்தற்காலை யாயினும் மண்டை நிணம் பெருப்ப நல்கிப் புரத்தல் வல்லன் என இயைத்துக் கொள்க. நல்கி யென ஒருசொல் வருவித்துக் கொள்க.
104. அதியமான் நெடுமான் அஞ்சி
ஒருகால் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பொருது வெல்வது குறித்து அவனிருந்த தகடூரைப் பகைவேந்தர் தம் படையொடு போந்து முற்றுகையிடக் கருதினர். அதனை ஒற்றரால் அறிந்து வைத்தும் அதியமான் அஞ்சாது செய்வன செய்து வந்தான். அவனது திருவோலக்கத்திருந்த ஒளவையார் பகைவர் முயற்சியும் அதியமான் மனவுரமும் அறிந்து பகைவர்க்கு அதியமானது வலியைத் தெரிவித்தற்குச் செவ்வி நோக்கியிருந்தார். இதற்குள் போர் மூண்டது; போரில் அதியமான் பகைமன்னரைத் தன் னகர்ப்புறத்தே வென்று வாகை சூடினான். தோற்ற வேந்தர்க்கு அறிவுறுக்கு மாற்றால் ஒளவையார் அதியமானது வாகைநிலையைப் பாராட்டி, நீவிர் போருடற்றக் கருதியது அதியமான் இளையன் என்பது பற்றியாகும். அதனால் அவனை அவனிருந்த ஊரிடத்தே வெல்லுதலை விரும்பினீர்கள்; முழங்காலளவிற்றாய நீரிற் கிடப்பினும் முதலை பெருங்களிற்றையும் கொல்லும் வலியுடைத்தாம்; அம் முதலை போல்வன் அதியமான்; இன்று அறிவிக்கின்றேன்; இனியேனும் இவனை இளையன் என்று இகழ்வதை விடுத்து நும்மைப் பாதுகாத்து வாழ்மின்என இப்பாட்டின்கண் உரைத்துள்ளார்.
| போற்றுமின் மறவீர் சாற்றுது நும்மை ஊர்க்குறு மாக்க ளாடக் கலங்கும் தாட்படு சின்னீர்க் களிறட்டு வீழ்க்கும் ஈர்ப்புடைக் காரஅத் தன்ன வென்னை | 5 | நுண்பல் கரும நினையா | | திளையனென் றிகழிற் பெறலரி தாடே. (104) |
திணை: வாகை. துறை: அரசவாகை. அவனை அவர் பாடியது. |