| உரை: போற்றுமின் - நீங்கள் பாதுகாமின், மறவீர்-; நும்மைச் சாற்றுதும் - நுமக்கு நாங்கள் அறிவிப்பேம்; ஊர்க்குறு மாக்கள் ஆட -ஊரின்கண் இளம்புதல்வர் ஆட; கலங்கும் தாள் படு சின்னீர் - கலங்குகின்ற காலளவான அளவிற்பட்ட நீருள்ளே; களிறு அட்டு வீழ்க்கும் - யானையைக் கொன்று வீழ்க்கும்; ஈர்ப்பு உரைக் கராஅத்தன்ன - இழுத்தலையுடைய முதலையை யொக்கும்; என்னை -என் இறைவனது, நுண்பல் கருமம் நினையாது - நுண்ணிய பல கருமத்தையும் நினையாதே; இளையன் என்று இகழின் - இளையனென்று மதியா திருப்பின்; ஆடு பெறல் அரிது - நுங்களுக்கு வென்றி பெறுதல் அரிது எ-று.
மறவீர், நுமக்குச் சாற்றுதும்; என்னை இளையன் என்றிகழின் வென்றி பெறுதல் அரிது; ஆதலால், நீர் போற்றுமின் எனக் கூட்டுக. மீப்புடையென் றோதி மிகுதியை யுடைய வென்று செப்பினு மமையும்.
விளக்கம்: இளஞ் சிறுவர்களைக் குறு மாக்கள் என்றார், மனவுணர்வு நிரம்பாமையின். நிரம்பியவழிக் குறு மகன்என்றும், குறு மகள்என்றும் வழங்குதல் காண்க. ஆடுதல், விளையாடுதல். தாள் படு சின்னீர் - தாள் மறையும் அளவிற்றான தண்ணீர். இடத்தால் வலி மிகுதலோடு இயல்பாகவே பெருங்களிற்றினையும் பற்றி யீர்த்துக் கொல்லும் வலியுடைத்தாதல் தோன்ற, ஈர்ப்புடைக் கராஅம்என்றார். நெடும் புனலுள் வெல்லும் முதலை (குறள். 495) என்றது பொது வியல்பு. என்னை - என் இறைவன். அதியமான் தனக்கு இறைவனென்றும், அவன் கராம்போலும் வலியுடையனென்றும் கூறியவாறு. நுண் பல் கருமம் - நுணுகி யாய்ந்து செய்யும் பல்வகைக் கருமச் சூழ்ச்சி. இதனால், அதியமான் இளையனாயினும், இடத்தாலும் மெய் வலியாலும் வினை வலியாலும் பெரியனாகலின், அவனைப் பகைவர் வெல்லுதல் அரிதென்றவாறு. ஈரப்புடை யென்னாது மீப்புடை யென்று பாடமாயின், மீப்புமிகுதி குறிக்கும் என்றற்கு மீப்புடை..... அமையும்என்றார்.
105. வேள் பாரி
வேள் பாரி பாண்டிநாட்டுப் பறம்பு மலையைச் சூழ்ந்த நாட்டை யுடையன்; இப் பறம்பு நாடு முந்நூறு ஊர்களை யுடையது; பறம்புமலை இப்போது பிரான்மலை யென வழங்குகிறது; புதுக்கோட்டை நாட்டைச் சார்ந்திருக்கிறது. பாரி என்பான் வேளிர் குலத்தவனாதலின், இவனைவேள் பாரி யென்பது வழக்கு. இவர் வேளிர் குலத்தில் எவ்வி யென்பான் குடியிற் பிறந்தவன். பறம்பு நாட்டைச் சார இருந்த பாண்டி நாட்டுத் திருவாதவூரிற் பிறந்து சிறந்து விளங்கிய கபில ரென்னும் நல்லிசைப் புலவர்க்கு இவன் இனிய நண்பன்; ஒளவையாராலும் சிறப்பித்துப் பாடப்பெற்றவன்; வரையாது வழங்கும் வள்ளல்; காற்றில் அலைந்த முல்லைக்கொடியின்பால் அருள்கொண்டு அது கொழுகொம்பாகப் பற்றிப் படரும் பொருட்டுத் தான் ஊர்ந்து சென்ற தேரைத் தந்தவன். முடிவில் தமிழக மெங்கும் இவனது புகழ் பரவக் கண்டு அழுக்காறு கொண்ட தமிழ்வேந்தர் மூவராலும் |