பக்கம் எண் :

239

 

சூழ்ச்சிவகையாற் கொலையுண்டனன். இவற்கு இரு மகளிர் உண்டு.
இவற்குப் பின் கபிலர் இம் மகளிரை ஒளவையார் துணைக்கொண்டு
தக்கார்க்கு மணம்புரிவித்துத்   தாமும்  உயிர்  நீத்தார். இவன்
காலததுக்குப் பின்வந்த சான்றோர்கள் பலரும் ஆளுடைய நம்பி முதலிய
அருட்குரவன்மார்களும் இவனையே கொடைக்கு எல்லையாகக் கொண்டு
கூறினரெனின், மேலும் கூறல் மிகையாம். தமிழகத்துப் புரவலர் வரலாற்றில்
வேள்பாரி சிறப்பிடம் பெறுதற்குரியன். இவன் நாட்டு மலைவளமும் சுனைநீர்
நலமும் புலவர் பாடும் புகழ் படைத்தவை.

      கபிலர் ஒருகால் வறுமையால் வாடி வதங்கும் விறலி
யொருத்தியைக் கண்டு அவளை வேள்பாரியிடம் சென்று அவனைப் பாடித்
தனக்கு வேண்டுவன பெற்றுக்கொள்க வென இப்பாட்டின்கண் அவளை
ஆற்றுப் படுத்தியுள்ளார்.

 சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி
தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப்
பெய்யினும் பெய்யா தாயினு மருவி
5கொள்ளுழு வியன்புலத் துழைகா லாக
 மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரும்
நீரினு மினிய சாயற்
பாரி வேள்பாற் பாடினை செலினே. (105)

     திணை: பாடாண்டிணை. துறை: விறலியாற்றுப்படை. வேள்
பாரியைக் கபிலர் பாடியது.

     உரை: வாணுதல் விறலி - ஒளி தங்கிய நுதலினையுடைய
விறலி;தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை - பெரிய
இடத்தையுடைய சுனையின்கண் தழைத்த கரிய இதழையுடைய
நீலத்தினது; வண்டு படு புது  மலர் - வண்டு  மொய்க்கும் புதிய
மலரின் கண்; தண் சிதர் கலாவ - குளிர்ந்த துளி கலக்க;
பெய்யினும் பெய்யா தாயினும் - மழை பெய்யினும் பெய்யா
தொழியினும்; அருவி - அருவி; கொள் ளுழு வியன்புலத் துழை
காலாக - கொள்ளிற் குழுத பரந்த நிலத்திடை நீரோடு காலாக ஓட;
மால் புடை நெடு வரைக் கோடு தோறு இழிதரும் -
கண்ணேணியையுடைய நெடிய மலையினது சிகரந்தோறும் இழிதரும்;
நீரினும் இனிய சாயல் - நீரினும் மிக இனி மையையுடைய; வேள்
பாரிபால் பாடினை செலின் - வேள் பாரி பக்கலே நீ பாடிச்
செல்லின்; சேயிழை பெறுகுவை - சிவந்த அணியைப் பெறுகுவை
எ-று.

     விறலி, பாரி வேள்பாற் பாடினை செலின் சேயிழை பெறுகுவை
யெனக்கூட்டுக. அவன் மலையாதலால் எக்காலமும் அருவி கோடுதோ
றிழிதரு மெனப்பட்டது. புது மலர்த் தண் சிதர் கலாவப் பெய்யினும்
பெய்யாதாயினும் காலாகக் கோடுதோ றிழிதரும் அருவி நீரினும் இனிய
வென இயையும். எனவே அவன் குணங்கள் தோன்றி நின்றன.