பக்கம் எண் :

241

 

குவியிணர்ப் புல்லிலை யெருக்கம் என்றது, முதற்கேற்ற அடையடுத்த
ஆகுபெயர். உம்மை இழிவு சிறப்பு; மெல்லிய ரென்பதற்கு வறுமையுற்றா
ரென்று முரைப்பர்.

     விளக்கம்: எருக்குக் குவிந்த இணர்களை யுடைத்தென்பதை,
“குவியிண ரெருக்கின் ததர்பூங் கண்ண”(அகம்.301) என்று பிறரும்
கூறுதல் காண்க. நறுமண மின்மையின், நற்பூ வகையிலும், இறைவன்
சூடுதலின் தீய பூவகையிலும் சேராமையின், எருக்கம் பூவை, “நல்லவும்
தீயவு மல்ல குவியிணர்ப், புல்லிலை யெருக்க மாயினும்”என்றார்.
குவியிணரும் புல்லிலையுமுடைமை எருக்கமாகிய முதற்குரிமையாதலின்,
இவை முதற்கேற்றஅடையாயின. ஆயினும், எருக்கம் ஈண்டு ஆகுபெயராய்
எருக்கம் பூவை யூணர்த்தி நின்றது. பித்தேறினோரும் மடலூர் பவரும்
ஆகிய நாண் கடை நின்றோர் சூடும் பூவாய் இழிக்கப்படுவது பற்றி
உம்மை இழிவுசிறப்பாயிற்று. மெல்லிய  ரென்றற்குப் புல்லிய  
குணமுடையோ ரெனப்  பொருள் கூறினமையின், “வறுமையுற்றாரென்று
முரைப்ப”ரென்றார்.

                    107. வேள் பாரி

     இப் பாட்டின்கண், ஆசிரியர் கபிலர், “நாட்டிற் புலவர் பலரும்
‘பாரி, பாரி’ யெனப் பாரி யொருவனையே   புகழ்கின்றனர்; இவ்வுல
குயிர்களைப் புரத்தற்கண்  பாரி  யொருவனேயன்றி  மாரியும்  உண்டே;
இஃதென்ன வியப்பு ”என வியந்து கூறியுள்ளார்.

பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.    
(107)

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

     உரை: பாரி பாரி என்று - பாரி பாரி யென்று சொல்லி; பல
ஏத்தி - அவன் பல புகழையும் வாழ்த்தி; ஒருவற் புகழ்வர் செந்நாப்
புலவர் - அவ்வொருவனையே புகழ்வர் செவ்விய நாவையுடைய
அறிவுடையோர்; பாரி ஒருவனும் அல்லன் - பாரியாகிய ஒருவனுமே
யல்லன்; மாரியும் உண்டு-; ஈண்டு உலகு புரப்பது - இவ்விடத்து
உலகத்தைப் பாதுகாத்தற்கு எ-று.

     உலகு புரத்தற்கு மாரியு முண்டாயிருக்கப் பாரி யொருவனைப்
புகழ்வர் செந்நாப் புலவ ரெனப் பழித்தது போலப் புகழ்ந்தவாறு.

     விளக்கம்: ஒருவர் புகழ்வர் என்றவிடத்துப் பிரிநிலை யேகாரம்
தொக்கது செந்நாப் புலவர் என்றார், பிறர் புகழின் அது பொருளாகக்
கொள்ளப்படா தென்றற்கு. மக்களுட் பிறர் இல்லையாயின், உலகு புரக்கும்
தொழி லொப்புமையால் மாரியுண்டன்றோ; அதனைப் புகழ்தற்கென்னை
என்பதாம். “உறுமிடத் துதவாது”(புறம். 143) போதலும் மாரிக்கு இயல்பு;
அச் சிறுமை யியல்பு பாரிபால் என்றும் இல்லாமையால் செந்நாப் புலவர்
பாரி யொருவனையே புகழ்ந்தன ரென வறிக.