பக்கம் எண் :

243

 

109. வேள் பாரி

    வேள் பாரிபால் மகட்கொடை வேண்டி மறுக்கப்பட்ட தமிழ் வேந்தர்
அதுவே வாயிலாக அவன்பால் பகைமை மிக்கனர். மூவேந்தரும் ஒருவர்
ஒருவராக அவனொடு பொருதற்குவந்து தோல்வி யெய்தினர். அதுகண்ட
கபிலர், “தமிழ் வேந்தர்களே, ஒருவரேயன்றி மூன்று பேரும் ஒருங்கு கூடி
நின்று இப் பறம்பினை முற்றுகையிட்டுக் கொள்ளினும் வேள் பாரியை
வெல்லுதலும் அரிது; பாரியது இப் பறம்பினைக் கைப் பற்றலும் அரிது;
பறம்பு நாட்டவர்க்கு வேண்டும் உணவு வகையில், உழவரது உழவினை
வேண்டாதே இப் பறம்புமலை நால்வகை யுணவுப் பொருளை நல்கும்;
அகலநீள வுயர வகையில் பறம்பு வானத்தை யொக்கும்; அதிலுள்ள
சுனைகளோ வானத்துள்ள விண்மீன்களை யொக்கும்; ஆகவே நீவிர்
மரந்தோறும் களிறுகளைப் பிணித்து நிறுத்தி, இடந்தோறும் தேர்களை
நிறுத்தி, உங்கள்மெய்ம்முயற்சியாலும் வாட்படையாலும் பறம்பினைப் பெறக்
கருதுவது முடியாத செயல் எனத் தெளி மின்; அவ்வாறு கொள்ளக்
கருதுவதும் அறியாமை. எனக்குத் தெரியும் அதனைக் கொள்ளும் வழி.
அஃதோர் அரியசெயலன்று. நீவிர் நும் வேந்தர் வடிவினை மாற்றிக் கூத்தர்
வேடமும், நும்முடைய மகளிர் விறலியர் வேடமும் கொண்டு வேள்பாரியின்
திருமுன் சென்று ஆடலும் பாடலும் செய்வீராயின், அவன் அவற்றிற்கு
வியந்து தன்னாட்டையும் மலையையும், ஒருங்கே யளிப்பன்”என
இப்பாட்டின்கண் கூறியுள்ளார்.

 அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொண் முரசின் மூவிரு முற்றினும்
உழவ ருழாதன நான்குபய னுடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
5 இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
 மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க்கும்மே
நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே
வான்க ணற்றவன் மலையே வானத்து
10மீன்க ணற்றதன் சுனையே யாங்கு
 மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும்
தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன்
யானறி குவனது கொள்ளு மாறே
15சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
 விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடுங் குன்று மொருங்கீ யும்மே.