பக்கம் எண் :

249

 

ஆனா - அடப்பட்டு அமைந் தொழியாத; கொழுந் துவை -
கொழுவிய துவையையும்; ஊன் - ஊனையுமுடைய; சோறும் -
சோற்றையும்; பொட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி - விரும்பிய
பரிசே தரும் மிக்க செல்வம் முதிர்ந்து; நட்டனை மன் முன் -
எம்மோடு நட்புச் செய்தாய் முன்பு; இனி - இப்பொழுது; பாரி மாய்ந்
தென - பாரி இறந்தானாக; கலங்கிக் கையற்று - கலங்கிச் செயலற்று;
நீர் வார் கண்ணேம் தொழுது - நீர் வார் கண்ணையுடையேமாய்த்
தொழுது; நிற்பழிச்சிச் சேறும் - நின்னை வாழ்த்திச் செல்லுதும்;
பெரும் பெயர்ப் பறம்பே - பெரிய புகழையுடைய பறம்பே; கோல்
திரள்  முன்   கை  குறுந்தொடி  மகளிர் - கோற்றொழிலாகச்
செய்யப்பட்ட திரண்ட குறிய வளையை யணிந்த முன்கையினையுடைய
மகளிரது; நாறு இருங் கூந்தல் கிழவரைப் படர்ந்து - மணங்கமழும்
கரிய கூந்தலைத் தீண்டுதற் குரியவரை நினைந்து எ-று.

     பறம்பே, பெருவளம் பழுனி நட்டனை முன்பு; இனி, நாறிருங் கூந்தற்
கிழவரைப் படர்ந்து சேறு மெனக் கூட்டுக. மன் கழிவின்கண் வந்தது.
வாழியும் ஓவும் அசைநிலை. ஆனாக் கொழுந் துவை யென்பதற்கு
விருப்பமமையாத கொழுந் துவை யெனினு மமையும்.

     விளக்கம்:மட்டு - கள்; ஆகுபெயரால் அது நிறைந்திருக்கும்
சாடிக்காயிற்று. இடையறவின்றி அடப்படுமாறு தோன்ற, “அட்டான்றானா”
என்றார். பாரியோ மாய்ந்தனன்; யாமும் செல்கின்றேம்; நிற்கின்ற நீ, வேள்
பாரியின் பெருமையும் புகழும் உலக முள்ளளவும் நிலைபெற்றோங்க
நிற்கின்றாயாதலின், நீ வாழ்வாயாக என்பார்; “வாழியோ பெரும்பெயர்ப்
பறம்பே”என்றார். தாம் செல்லுதற்கும் காரணம் இது வென்பார், “மகளிர்க்
குரிய கிழவரைப் படர்ந்து செல்கின்றே”மென்றார். மணந்த கணவனாலன்றி
மகளிர் கூந்தல் பிறரால் தீண்டப் படாதாகலின், அம்மரபு நோக்கி, “மகளிர்
நாறிருங் கூந்தல் கிழவரைப் படர்ந்”தென்றார். கொழுந் துவை, தன்னை
உண்பார்க்கு மேன்மலும் விருப்பத்தை மிகுவிக்கும் சுவையுடைய
தென்றற்கு,“விருப்ப மமையாத கொழுந் துவை யெனினு மமையும்”என்றார்.
உரைகாரர்.

                         114. வேள் பாரி

     பாரி மகளிரை அழைத்துக்கொண்டு செல்லுங்கால், நெடிது சென்ற
வழியும் பறம்புமலை தோன்றி நிற்பக் கண்ட மகளிர், “யாம் இத்துணை
நெடிது போந்தும் நம் பறம்பு நமக்குத் தன் தோற்றத்தினை வழங்கா
நின்றது”என வியந்து கூறக் கேட்ட கபிலர் மனம் நொந்து கூறுவார்,
“நெடிய புகழானாகிய பாரியது பறம்பு ஈண்டு நின்று காணினும் தோன்றும்;
அவனுளனாய காலத்து யாண்டு நின்று நோக்கினும் புகழுருவாய்த்
தோன்றும்; இப்போதோ ஏனை மலைகளைப்போல வெறுங்கட்புலனாய்த்
தோன்று மளவாயிற்”றெனக் கூறுகின்றார்.