| மூவேந்தர்பால் பகைகொண்டு மாய்ந்த பாரியின் குன்றம் இந்தச் சிறப்பை யிழந்ததுகாண்என்று வருந்திக் கூறுகின்றார்.
| ஒருசா ரருவி யார்ப்ப வொருசார் பாணர்மண்டை நிறையப் பெய்ம்மார் வாக்க வுக்க தேக்கட் டேறல் கல்லலைத் தொழுகு மன்னே பல்வேல் | 5 | அண்ணல் யானை வேந்தர்க் | | கின்னா னாகிய வினியோன் குன்றே. (115) |
திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
உரை: ஒரு சார் அருவி ஆர்ப்ப - ஒருபக்கம் அருவி ஆர்த்தொழுக; ஒருசார் - ஒரு பக்கம்; பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் - பாணருடைய மண்டைகள் நிரம்ப வார்க்க வேண்டி; வாக்க உக்க தேக்கள் தேறல் - வடிக்க உக்க இனிய கள்ளாகிய தேறல்; கல்லலைத் தொழுகும் - கல்லை யுருட்டி யொழுகும்; பல்வேல் - பல வேற்படையுடனே; அண்ணல் யானை வேர்ந்தர்க்கு - தலைமை பொருந்தி யானையையுமுடைய வேந்தர்க்கு; இன்னானாகிய இனியோன் குன்று - கொடியோனாகிய இனியோன் மலை; மன் - அது கழிந்தது எ-று.
குன்று தேறல் கல்லலைத் தொழுகும்; இனி அது கழிந்ததென்று கூட்டுக. அருவியும் அவனுளனாயின் உளதாவதென்பது கருத்து. மன், கழிவின்கண் வந்தது. குன்று தேறல் கல்லலைத் தொழுகுமென இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்துமேல் ஏறிநின்றது.
விளக்கம்: முன்னைப் பாட்டு, நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல், வாரசும் பொழுகும்என்றதாக, இப்பாட்டு, பாணரது மண்டை நிறையுமாறு சொரியும் தேறல் கல்லலைத் தொழுகும் என்கின்றது. வேள் பாரி, வேந்தர்க்கு இன்னானாகியும் இரவலர்க்கு இனியனாகியும் ஒழுகினமை தோன்ற, வேந்தர்க்கு இன்னானாகிய இனியோன்என்றார். மன், கழிவின்கண் வந்தது; இதனால், பாரியும் இல்லை; அருவியும் இல்லையாறிற் றென்பதாம். வழிந் தொழுகும் தேறலின் மிகுதி தோன்றக் கல்லலைத் தொழுகும்என்றார். பாணர்க்குப் பெய் தற்குச் சொரிந்த தேறலின் மிகுதி கல்லலைத் தொழுகு மென்றது, வேள்பாரி இரவலர்க்கு வரையாது வழங்கியும் மிக்கிருந்த அவனது செல்வம், வேந்தர் உள்ளத்தே பகைமை தோற்றுவித்து, அதன் வாயிலாக அவன் உயிரைக் கொண்டுபோயிற்றென இரங்கும் குறிப்புடையதாதலை யுணர்க. |