பக்கம் எண் :

252

 

                        116. வேள் பாரி

     பாரி மகளிரைப் பார்ப்பாரிடத்தே அடைக்கலப்படுத்திய கபிலர்,
அவர்களைத் தக்க அரச குமாரர்கட்கு மணம்புரிவித்தல் வேண்டித்
தமிழகத்துக் குறுநில மன்னர் பலரையும் காணச் சென்றார். செல்கையில்
அடிக்கடி பாரியினது பறம்பு நாட்டையும் பறம்பு மலையையும்
காண்பாராயினர்; அந்நாடும் கெட்டுப் புன்புலமாயிற்று; மலையும்
பொலிவிழந்தது. அவற்றின் காட்சி அவர் காணுந்தோறும் அவர்க்கு மிக்க
வருத்தத்தைத் தந்தது. இந்நிலையில் ஒருகால் பறம்பு நாட்டைக் கண்டார்.
பாரியிருந்த காலத்தே நாட்டு மகளிர் வரைமே லேறியிருந்து நாட்டில்
பாரியொடு பொருதல் வேண்டி வரும் வேந்தர்களின் குதிரைகளை
யெண்ணிப் பார்ப்பது வழக்கம்; இப்போது அஃதொழிந்தமையின் அவர்கள்
அந்நாடு வழியே செல்லும் உமணர்கள் கொண்டேகும் உப்பு வண்டிகளை
யெண்ணிப் பார்ப்பது கண்டார். அதனை இப்பாட்டின்கண் உரைத்துள்ளார்.

 தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்
கூம்பவிழ் முழுநெறி புரள்வரு மல்குல்
ஏந்தெழின் மழைக்க ணின்னகை மகளிர்
புன்மூசு கவலைய முண்மிடை வேலிப்
5.பஞ்சி முன்றிற் சிற்றி லாங்கட்
 பீரை நாறிய சுரையிவர் மருங்கின்
ஈத்திலைக் குப்பை யேறி யுமணர்
உப்பொ யொழுகை யெண்ணுப மாதோ
நோகோ யானே தேய்கமா காலை
10பயில்பூஞ் சோலை மயிலெழுந் தாலவும்
 பயிலிருஞ் சிலம்பிற் கலைபாய்ந் துகளவும்
கலையுங் கொள்ளா வாகப் பலவும்
கால மன்றியு மரம்பயம் பகரும்
யாண ரறாஅ வியன்மலை யற்றே
15 அண்ண னெடுவரை யேறித் தந்தை
 பெரிய நறவிற் கூர்வேற் பாரிய
தருமை யறியார் போரெதிர்ந்து வந்த
வலம்படு தானை வேந்தர்
பொலம்படைக் கலிமா வெண்ணு வோரே.
(116)

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

     உரை : தீ நீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த - இனிய
நீரையுடைய பெரிய ஆழ்ந்த சுனைக்கண் பூத்த; குவளைக் கூம்பவிழ்
முழு நெறி புறள் வரும் அல்குல் - செங்கழு நீரினது முகை
யவிழ்ந்து  புறவித  
ழொடித்த முழுப்பூவாற் செய்யப்பட்ட
தழையசையும் அல்குலையும்;