பக்கம் எண் :

26

     
  அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்
கொல்களிற்று மீமிசை கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
 10.முந்நீர் விழவி னெடியோன்
 நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (9)

     திணையும்  துறையும்  அவை.  பாண்டியன்   பல்யாகசாலை
முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

     உரை : ஆவும் ஆன் இயற் பார்ப்பன  மாக்களும் - ஆவும்
ஆனினதியல்பையுடைய  பார்ப்பாரும்;  பெண்டிரும்  -  மகளிரும்;
பிணியுடையீரும் - நோயுடையீரும்; பேணி - பாதுகாத்து;  தென்புல
வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் - தென்றிசைக்கண் வாழ்வோராகிய
நுங்குடியில்    இறந்தோர்க்குச்    செய்தற்கரிய    பிண்டோதகக்
கிரியையைப்  பண்ணும்; பொன்போல்  புதல்வர்ப்   பெறாதீரும் -
பொன்போலும் பிள்ளைகளைப் பெறாதீரும்;எம் அம்பு கடி விடுதும்
-
எம்முடைய  அம்பை  விரையச்  செலுத்தக்  கடவேம்; நும் அரண்
சேர்மின் என - நீர் நுமக்கு அரணாகிய இடத்தை அடையும் என்று;
அறத்தாறு  நுவலும்   பூட்கை   -    அறநெறியைச்    சொல்லும்
மேற்கோளினையும்; மறத்தின் -   அதற்கேற்ற மறத்தினையுமுடைய;
கொல்  களிற்று  மீமிசைக்  கொடி -   கொல்   யானை   மேலே
எடுக்கப்பட்ட  கொடிகள்;   விசும்பு  நிழற்றும்  -   ஆகாயத்தை
நிழற்செய்யும்;  எங்கோ குடுமி வாழிய - எம்முடைய வேந்தனாகிய
குடுமி வாழ்வானாக;  தம் கோ - தம்முடைய கோவாகிய; செந்நீர்ப்
பசும்பொன் -சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னை;
வயிரியர்க்கு   ஈத்த  -  கூத்தர்க்கு  வழங்கிய;  முந்நீர் விழவின்

நெடியோன் -முந்நீர்க் கடற்றெய்வத்திற்கெடுத்த விழாவினையுடைய
நெடியோனால் உளதாக்கப்பட்ட; நன்னீர்ப் பஃறுளி மணலினும் பல -
நல்ல நீரையுடைய பஃறுளி யென்னும் ஆற்றின் மணலினும் பலகாலம்
எ-று.
   

     எங் கோவாகிய  குடுமி  பஃறுளியாற்று  மணலினும்  பலகாலம்
வாழியவெனக் கூட்டுக. கொடி  விசும்பு  நிழற்றுமென்பது  சினைவினைப்
பாற்பட்டு எங்கோ வென்னும்  முதலொடு  முடிந்தது; கொடியால் விசும்பு
நிழற்றுமென் றுரைப்பினு  மமையும்.  மீமிசைக்கொடி  விசும்பு  நிழற்றும்
களிற்றினையுமென  மாறிக்  கூட்டுவாரு  முளர்.   தங்கோச்   செந்நீர்ப்
பசும்பொன்  என்பதற்குத்  தமது  அரசாட்சியினது  செவ்விய நீர்மையாற்
செய்த   பசும்பொன்   என்பாருமுளர்.   முந்நீர்க்   கண்  வடிம்பலம்ப
நின்றானென்ற வியப்பால்  நெடியோ  னென்றா  ரென்ப.  யாற்று  நீரும்
ஊற்றுநீரும் மழைநீரு  முடைமையான், கடற்கு முந்நீரென்று பெயராயிற்று.
அன்றி முன்னீரென்று  பாடமோதி  நிலத்திற்கு  முன்னாகிய   நீரென்று
முரைப்ப. பிணியுடையீரும் புதல்வர்ப் பெறாதீரு  மென்னும்  முன்னிலைப்
பெயரோடு ஆவும் பார்ப்பன மாக்களும் பெண்டிருமென்னும்