பக்கம் எண் :

27

    

படர்க்கைப்  பெயர்கள்  விராய்  வந்து, நும்மரண்  சேர்மின்  என்னும்
முன்னிலை  வினையான்  முடிதல்,  “செய்யுண்  மருங்கினும் வழக்கியல்
மருங்கினும்” (தொல்.சொல்.எச்ச. 67) என்னும்  அதிகாரப்  புறனடையாற்
கொள்ளப்படும்.

     விளக்கம்: ஆனினதியல் பையுடைய பார்ப்பாரும் என்று ஏட்டில்
காணப்படுகிறது. அந்தணரை  மாக்களென்று  வழங்காராதலால்,  ஏட்டிற்
காணப்பட்டதே ஈண்டுக் கொள்ளப்பட்டது. அச்சுப்படி “ஆனினதியல்பை
யுடைய  அந்தணரும்”  என்று  கூறுகிறது.  பிண்டோதகம்,  பிண்டமும்
உதகமும். பிண்டம் - சோறு;  உதகம் - நீர்.  ஒரு  குடியில்  இறந்தோர்,
தென்றிசைக்கண்  இருந்து,  தம்  குடியிற்  பிறக்கும்  புதல்வர்  தம்மை
நோக்கிப் படைக்கும் சோறும் நீரும் உண்டு வாழ்வர் என்ப.பகைவராலும்
விரும்பப்படும் சிறப்புப்பற்றி, புதல்வரைப் “பொன்போற் புதல்வர்”என்றார்;
“பொன்போற் புதல்வனோ டென்னீத் தோனே” (ஐங்.265)  என்று பிறரும
கூறுப.   அடையும்   என்பது   உம்மீற்று   முன்னிலை   வினைமுற்று;
செய்யுமென்னும் முற்றன்று.மேற்கோள் - மேற்கொண்டொழுகும் கொள்கை.
ஒரு  கொள்கையினை மேற்கொண்ட வழியும், அதனைச் செயற்படுத்தற்கு
இன்றியமையாது வேண்டப்படுவது மறப்பண்பாதலின்,“மறத்தின்”என்றதற்கு,
அதற்கேற்ற மறத்தினையும்“  என்றுரைத்தார்.  மீமிசைக்  கொடியென்றது
பற்றி,  அது  விசும்பினும்  உயர்ந்து  அதனைக்   கீழ்ப்படுத்தித்   தான்
மேலுயர்ந்து நின்று அவ் விசும்பிற்கு  நிழல்  செய்யும்  என்பது  தோன்ற
“ஆகாயத்தை நிழற்செய்யும்”  என்றார்.  மீமிசை  யென்புழி  மீயென்றது
யானைமீதுள்ள    சிவிகையின்    மேலிடத்தையும்,   மிசை   யென்றது,
அவ்விடத்தே  விசும்பும்  கீழ்ப்பட  மேலுயர்ந்து நிற்கும் கொடி மரத்தின்
உச்சியையும்  குறித்து  நின்றது.  நிழற்றுமென்பது கொடியின் வினை.அது
பெயரெச்சமாய்க்   கோவென்பதனோடு  முடிந்தது.   கோவுக்குக்  கொடி
சினையாதலின், “சினை  வினைப்பாற்பட்டு எங் கோவென்னும் முதலொடு
முடிந்தது”  என்றார்.  இவ்வாறு  கொள்ளாமல்,  விசும்பானது   தன்கீழ்
களிற்றுமிசை நின்று நுடங்கும் கொடியால் நிலத்தை நிழற்செய்யும் என்றும்
பொருள்  கூறலாம்  என்பதற்கு, “கொடியால் விசும்பு  நிழற்றும் எனினும்
அமையும்”   என்றார்.  கொடிநின்று   விசும்பு   நிழற்றுதற்குக்   களிறு
இடமாதலின்,  இடத்து  நிகழ்  பொருளின்  தொழில் இடத்துமேலேற்றிக்
கூறுபவரும்    உண்டு;    அதனால்,    “மீமிசைக்கொடி.......    மாறிக்
கூட்டுவாருமுளர்” என்றார்.  “செவ்விய  நீர்மையாற்செய்த  பசும்பொன்”
என்று உரைகூறுவோர், செய்த என ்பதற்கு ஈட்டிய என்பது பொருளாகக்
கொண்டுரைப்பர்.

     நெடியோன்   பாண்டி   வேந்தருள்   மிகப்    பழையோனாகிய
ஒருவனாவான். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனை மாங்குடி
மருதனாரென்னும் சான்றோர், “பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்”
(மதுரைக்.61)   என்பதனாலும்    இவனை    யறியலாம்.    உரைகாரர்,
திருவிளையாடற் புராண காலத்துக்குப் பிற்பட்டவராதலின், வடிம் பலம்ப
நின்ற பாண்டியன் வரலாற்றை யுட்கொண்டு இதற்கு வேறுரை கூறுபவரைக்
கண்டு  “முந்நீர்க்கண்  வடிம்  பலம்பநின்றானென்ற வியப்பால் நெடியோ
னென்றா  ரென்ப”  என்று  குறிக்கின்றார்.   முந்நீர்    விழவு   கண்ட
நெடியோனுக்கும்   வடிம்பலம்ப  நின்ற   பாண்டியனுக்கும்  பொருத்தம்
யாதுமில்லையாதலால், வடிம்  பலம்ப   நின்ற   பாண்டிய   னென்னாது
நெடியோனென்றே உரைகூறினார். இனி, முந்நீர் என்று