| கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி, பரந்திலங்கருவியொடு நரந்தம் கனவும், ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம் (பதிற். 11) என்பது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. நரந்தை, நரந்தம் எனவும் வழங்கும்.இஃது ஒருவகைப் புல். இத்தகைய சிறப்பினையுடைய இமயமுளதாகவும், தென்றிசைக்கண் ஆய்குடி யின்றாயின், இம்மலர்தலை யுலகு பிறழுமாகலின், இதற்குரிய ஆய் அண்டிரனை முன்னே நினையாது விட்ட குற்றத்தால் என் உள்ளம் ஆழ்க எனத் தன்னை நொந்து கொண்டவாறு. நரந்தை நறும்புல் லென்றது உம்மைத் தொகை. தகரம், ஒருவகை மரம். இனிச் சில பிரதிகளில், இமயத்திற் கொருதரமாக உலகத்தைத் தாங்கும் ஆய் உளனாகவும், பிறரிசையைக் கேட்ட செவி தூர்க; கேட்டும் பிறரை நினைத்த உள்ளம் ஆழ்க; நினைத்துப் பிறரைப்பாடிய நாப் போழ்வதாக வென உள்ளமொழிந் தனவற்றிற்கும் காரணம் வருவித்துக்கொள்க என்றோர் உரை காணப்படுகிறது.
133. வேள் ஆய் அண்டிரன்
ஆய் அண்டிரனைக் கண்டு அவன் புகழ்பாடி மிக்க களிற்றுப் பரிசு பெற்றேகும் விறலி யொருத்தி, அவன் பெயரைக் கேட்ட வளவன்றி நேரிற் கண்டறியாத வேறொரு விறலியைக் கண்டு, அவளது அறியாமைக் கிரங்கி, விறலி நீ ஆய் அண்டிரனைக் கண்ணிற் கண்டதில்லை. காண விரும்பினையாயின் இப்பொழுதே நின் கொண்டைமேற் காற்றடிக்க மயில்போல் கவினுற நடந்து சென்று அவனைக் காண்பாயாக என விறலியாற்றுப்படை வாயிலாக இவனது புகழை முடமோசியார் இப் பாட்டில் மொழிந்துள்ளார்.
| மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற் கேட்பி னல்லது காண்பறி யலையே காண்டல் வேண்டினை யாயின் மாண்டநின் விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக் | 5 | கலவ மஞ்ஞையிற் காண்வர வியலி | | மாரி யன்ன வண்மைத் தேர்வே ளாயைக் காணிய சென்மே. (133) |
திணை : அது. துறை : விறலியாற்றுப்படை. அவனை அவர் பாடியது.
உரை : மெல்லியல் விறலி - மெல்லிய இயல்பினையுடைய விறலி; நீ நல்லிசை செவியிற் கேட்பி னல்லது - நீ நல்ல புகழைச் செவியாற் கேட்பினல்லது; காண்பறியலை - அவன் வடிவைக் காண்டலறியாய்; காண்டல் வேண்டினை யாயின் - காண்டலை விரும்பினாயாயின்; மாண்ட நின் விரைவளர் கூந்தல் வரைவளி உளர - மாட்சிமைப்பட்ட நினது மணம் வளரும் கூந்தலிலே வரையிடத்துக்காற்று வந்தசைப்ப; கலவ மஞ்ஞையிற் காண்வர இயலி - பீலியையுடைய மயில்போலக் காட்சியுண்டாக நடந்து; |